×

சாதனைப்பயணம் தொடர வாழ்த்துகள்: பாராலிம்பிக்ஸில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ.2 கோடி ஊக்கப்பரிசு அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை: பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு ரூ.2 கோடி ஊக்கப்பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இன்று நடைபெற்ற ஆடவர் உயரம் தாண்டுதல் இறுதிச்சுற்று போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் உள்பட மூன்று இந்திய வீரர்கள் பங்கேற்றனர்.தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் சரத் குமார் 1.83 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார். முன்னதாக இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் சிங்ராஜ் அதானா வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதல் மற்றும் துப்பாக்கி சுடுதலில் இன்று பதக்கம் வென்றுள்ள இந்திய வீரர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்திருந்தார். இந்நிலையில் பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு ரூ.2 கோடி ஊக்கப்பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டின் ‘தங்கமகன்’ என தடகள விளையாட்டுப் போட்டிகளில் புகழ்பெற்ற திரு.மாரியப்பன் தங்கவேலு, டோக்கியோ பாரலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் மீண்டும் பெருமை தேடித் தந்திருக்கும் அவரைத் தமிழ்நாட்டு மக்களின் சார்பில் வாழ்த்தி மகிழ்கிறேன். ஏழ்மையான வாழ்வையும், சவாலான உடல்நிலையையும் சளைக்காத தன் திறமையால் வென்று, ஒவ்வொரு இளைஞர் உள்ளத்திலும் ஊக்கத்தை விதைக்கும் அவர் பத்மஸ்ரீ, அர்ஜூனா விருது, மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது எனப் பல பெருமைகளைப் பெற்றிருக்கிறார்.டோக்கியோ பாராலிம்பிக்கில் திரு.மாரியப்பன் தங்கவேலு அவர்களின் வெள்ளிப்பதக்கச் சாதனையைப் பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.2 கோடி ஊக்கப் பரிசு அளிக்கப்படுகிறது. விளையாட்டுத் துறையில் தமிழ்நாட்டின் சாதனைப் பயணம் தொடரட்டும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Tags : CM ,Mariapan ,Paralympics ,Stalin , Congratulations on continuing the record journey: Chief Minister MK Stalin announces Rs 2 crore incentive for Paralympic silver medalist Mariappan ..!
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...