×

கத்தார் தலைநகர் தோஹாவில் தலிபான்களுடன் இந்திய தூதர் தீபக் மிட்டல் பேச்சுவார்த்தை: வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு..!

தோகா: தலிபான் துணை தலைவருடன், இந்தியா இன்று கத்தாரில் பேச்சுவார்த்தை நடத்தினார். டந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னர், தீவிரவாதிகளை போட்டுத் தள்ளுவதற்காக அடுத்த சில வாரங்களில் ஆப்கானிஸ்தானுக்குள் அமெரிக்க படைகள் நுழைந்தன. அதன்பின், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்க படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தானை, தலிபான் தீவிரவாதிகள் கடந்த சில வாரங்களுக்கு முன் கைப்பற்றினர். அமெரிக்க அரசு நிர்வாகம் தங்களது படைகளை இன்றுக்குள் (ஆக. 31) வாபஸ் பெறுவதாக அறிவித்ததால், தலிபான்கள் ஆப்கானிஸ்தானை தங்களது கட்டுக்குள் படிப்படியாக கொண்டு வந்தனர்.

தலிபான்களுக்கும் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஆப்கானில் வசித்து வந்த வெளிநாட்டினரை அந்தந்த நாடுகள் கடந்த 3 வாரங்களாக வெளியேற்றின. தலிபான்களின் அச்சுறுத்தலுக்கு பயந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்களும் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றனர். இதனால் காபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அங்கு நடந்த துயரங்களை உலகமே பார்த்துக் கொண்டு இருந்தது. கிட்டதிட்ட 1.5 லட்சம் பேர் ஆப்கானில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

தலிபான் - அமெரிக்க படைகள் விவகாரம் ஒருபக்கம் இருக்க, ஐஎஸ்ஐஎஸ் - கே என்ற அமைப்பின் தீவிரவாத குழுக்கள், தலிபான்களுக்கு எதிராக செயல்படும் ஆப்கானிஸ்தானின் பஞ்ச்ஷிர் மாகாண படைகளுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டு வந்தன. ஐஎஸ் தற்கொலைப்படை தாக்குதலில் 13 அமெரிக்கர் உட்பட 170க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். அதன்பின் அமெரிக்கா நடத்திய பதிலடி ட்ரோன் தாக்குதலில் ஐஎஸ் தீவிரவாதிகளின் வாகனங்கள், முக்கிய தளபதிகள் சிலர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதேநேரம், ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய மற்றொரு தாக்குதலில் குழந்தைகள் உட்பட 10 பேர் பலியாகினர்.

இத்தனை களேபரங்களுக்கு மத்தியில், அமெரிக்காவுக்கான காலகெடு இன்றுடன் முடிவதால், நேற்றுடன் தனது கடைசி விமான சேவையை அமெரிக்கா முடித்துக் கொண்டது. காபூல் விமான நிலையத்தில் இருந்து கெடு விதிக்கப்பட்ட ஒரு நாள் முன்னதாக, அமெரிக்கா தனது கடைசி விமானமான ‘சி -17’-வுடன் நேற்று மாலை 3.29 மணிக்கு புறப்பட்டு அமெரிக்கா சென்றடைந்தது. இதையடுத்து,  20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தின் கீழ் முழுமையாக வந்துள்ள நிலையில், தலீபான் பிரதிநிதியை இந்திய தூதர் தீபக் மிட்டல் சந்தித்துப்பேசினார்.

கத்தார் தலைநகர் தோஹாவில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது; ஆப்கானில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது, அவர்கள் பத்திரமாக நாடு திரும்ப நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட விஷயங்களை இந்திய தூதர் வலியுறுத்தியதாகவும், அதற்கு தலிபான் உத்தரவாதம் அளித்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தான் மண்ணில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளோ, பயங்கரவாத செயல்களோ எந்த வகையிலும் நடைபெறக் கூடாது என இந்திய தூதர் குறிப்பிட்டதாகவும், இந்த விவகாரங்களுக்கு நேர்மறையான முறையில் தீர்வு காணப்படும் என்றும் தலிபான் பிரதிநிதி கூறியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Tags : Ambassador ,Deepak Mittal ,Taliban ,Qatar ,Doha ,State Ministry , Indian Ambassador Deepak Mittal holds talks with Taliban in Doha, Qatar: Foreign Ministry
× RELATED போட்டோ எடுக்கக்கூடாதா? நான் ஓட்டே போட...