வில்லுக்குறி பேரூராட்சியில் குடிநீருக்காக திண்டாடும் இடமருவத்தூர் கிராமம்: சுகாதாரமற்ற தண்ணீரை மக்கள் குடிக்கும் அவலம்

நாகர்கோவில்: வில்லுக்குறி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி இடமருவத்தூர் ஆகும். இந்த பகுதியில் குடிநீர் தேவை என்பது நீண்ட நாட்களாக பூர்த்தி செய்யப்படாமல் இருந்து வருகிறது. குடிநீர் தேவையை நிறைவேற்ற கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தியும் பலன் இல்லை. இடமருவத்தூர் ஊருக்கு வரும் கூட்டுக்குடிநீர் திட்ட பம்பிங் ைலனில் இருந்து 2 பொது நல்லிகள் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டிக்கு வருகின்ற தண்ணீர் மிக குறைவாகவே வந்து சேருகிறது. இது தொடர்பாக பொதுமக்கள் புகார் அளித்தும் அதிகாரிகள் அவ்வாறு குடிநீர் இணைப்பு கொடுக்கவில்லை என்று கூறுகின்றனர்.

ஆனால் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டதை மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதனால் ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறையை போக்க குளத்து நீரை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றுகின்றனர். குளத்தின் மேல் பகுதியில் உள்ள ஊரில் உள்ள கழிவுகள் அனைத்தும் இந்த குளத்தில் வந்து சேருகிறது. இதனால் குடிநீர் சுகாதாரமாக இல்ைல. இடமருவத்தூர் பகுதி மக்கள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் தண்ணீரை பரிசோதனை செய்ததில் இந்த தண்ணீரை குடிநீராக பயன்படுத்த தகுதியில்லை என்று சான்று வழங்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் இதனையே குடிநீராக விநியோகம் செய்து வருகின்றனர்.  

ஊரில் தெருவிளக்கு பிரச்னைகள் இருந்து வருகிறது. தெருவிளக்கிற்கான மின் இணைப்பு பெட்டி ஊருக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளது. இதனால் தெருவிளக்குகளை எரிய செய்யவும், நிறுத்தவும் சிரமம் உள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஊரில் ெபாதுப்பாதை ஏற்படுத்திட வேண்டும், ஊரில் உள்ள செல்லாங்குகளத்தில் கால்நடைகளை குளிப்பாட்ட வசதியாக படித்துறை ஏற்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. செல்லாங்குளம் நடுவே நான்குவழி சாலை செல்கிறது. இதற்காக குளப்பகுதிகள் மூடப்பட்டுள்ளது.

இதனால் குளத்தை தூர்வாரிட ரூ.4.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அப்போது அதன் ஒரு பகுதி மட்டும் தூர்வாரப்பட்டு பிற பகுதிகள் தூர்வாரவில்லை. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு மனுக்கள் அளித்தும் பலன் இல்லாத நிலை உள்ளது. இந்த குளத்தின் பக்கசுவர் மழை காரணமாக 100 மீட்டர் அளவுக்கு இடிந்துள்ளது. மறுகால் பகுதியிலும் பக்கசுவர் பழுதடைந்துள்ளது. இதனால் குளத்தில் விவசாயத்திற்காக தண்ணீரை சேகரிக்க முடியாத நிலை உள்ளது. இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் அளித்தும் கண்டுகொள்ளவில்லை.

வில்லுக்குறி பேரூராட்சி பகுதியில் தெருவிளக்கு பராமரிப்பு பணிகளுக்காக ஆளூர் பகுதியை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் தெருவிளக்கு பராமரிப்பு முறையாக நடைபெறுவது இல்லை. இது தொடர்பாக புகார் அளித்தபோதிலும் அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை. வில்லுக்குறி பேரூராட்சி நிர்வாக பகுதியில் உள்ள மின் கம்பங்களில் நுள்ளிவிளை பகுதிக்கான பதிவு எண்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனால் தேவையற்ற எல்லை பிரச்னைகள் உருவாக்கப்படுவதாக இடமருவத்தூர் பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

 வில்லுக்குறி பாலம் பகுதியில் உயர்கோபுர மின் விளக்கு உள்ளது. இந்த கோபுரத்தில் தற்போது ஒரு மின்விளக்கு மட்டுமே எரிகிறது. மீதமுள்ள 4 மின் விளக்குகள் எரியவில்லை. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. பரசேரி சந்திப்பு பகுதியில் எம்.பி தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.3 லட்சம் மதிப்பில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் பேரூராட்சி நிர்வாகம் இதனை நுள்ளிவிளை ஊராட்சி பகுதி என்று கூறிவிட்டதால் தெருவிளக்கு அமைக்கப்படாத நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் எல்லையை முறையாக வரையறை செய்து உயர்கோபுர மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இடமருவத்தூர் பகுதியில் உள்ள மேல்நிலை தேக்க தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெறும்போது நாட்கணக்கில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் குடிநீர் பிரச்னையை போக்குவதுடன் இந்த பகுதி மக்களின் பொதுவான பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பியுள்ளனர்.

Related Stories:

More
>