×

பிரதமர் மோடி பாராட்டிய காஞ்சிரங்கால் ஊராட்சியில் காய்கறி, உணவு கழிவிலிருந்து மின்சாரம் தயாரிப்பு: முன்னுதாரணமாக திகழ்கிறது

சிவகங்கை: பிரதமர் மோடி பாராட்டிய காஞ்சிரங்கால் ஊராட்சியில் உணவுக்கழிவு, காய்கறி கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. சிவகங்கை நகரை ஒட்டியுள்ளது காஞ்சிரங்கால் ஊராட்சி. சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்த ஊராட்சியில் கடந்த 10ம் தேதி ரூர்பன் திட்டத்தில் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் உணவுக்கழிவு, காய்கறி கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. குப்பைகளில் வீசப்படும் காய்கறி கழிவுகள், உணவுகள் முதலியவை சேகரிக்கப்பட்டு இங்கு கொண்டு வரப்படுகின்றன. இவையனைத்தையும் அரவை இயந்திரம் மூலம் அரைத்து அதன்பிறகு நீருடன் கலந்து சேமிப்பு தொட்டிக்கு செல்லும் கூழ் நிலையிலான திரவம் எரிபொருள் கலனில் சேமிக்கப்படுகிறது.

அதிலிருந்து பயோ கேஸ் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. எஞ்சிய திரவம் விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் உரமாக சேமிக்கப்படுகிறது. ஊராட்சியில் நாள் ஒன்றுக்கு 2 மெட்ரிக் டன் குப்பைகள் அரைத்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் 200 யூனிட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் 4 பணியாளர்கள் பணிபுரிகின்றனர். குப்பைகளை தரம் பிரித்து உணவு, காய்கறி கழிவுகளை மட்டும் அரவை இயந்திரத்தில் போடும் பணிகளில் மூன்று பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். முதற்கட்டமாக இத்திட்டம் செயல்படுத்த பயன்படும் ஜெனரேட்டர், அரவை இயந்திரம் உள்ளிட்ட இத்திட்ட வளாகத்தில் உள்ள இயந்திரங்கள், வளாகத்தில் உள்ள மின்விளக்குகள் ஆகிய அனைத்தும் இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மூலமே இயங்கி வருகிறது.

மேலும் குப்பைகளை சேகரிக்க பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் இயங்கும் சிறிய வகையிலான வாகனங்களுக்கும் இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மூலம் சார்ஜ் செய்யப்படுகிறது. தொடர்ந்து மின் வாரியத்துடன் இணைந்து இந்த ஊராட்சியில் உள்ள அனைத்து தெரு விளக்குகளுக்கும் இத்திட்டத்தின் மூலமே மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதுகுறித்து ஊராட்சி தலைவர் மணிமுத்து கூறுகையில், ‘இந்தியாவிலேயே முதன் முதலாக இத்திட்டம் காஞ்கிரங்காலில் தொடங்கப்பட்டுள்ளது.

நாள்தோறும் பொதுமக்கள் பயன்படுத்திய கழிவுப் பொருட்களை அப்புறப்படுத்துவதால், சுகாதாரம் பாதுகாக்கப்படுவதுடன், அதன்மூலம் மக்களின் அடிப்படை தேவைக்கும், விவசாயத்திற்கும் இத்திட்டம் பயனுள்ளதாக இருந்து வருகிறது. இத்திட்டம் குறித்து அகில இந்திய அளவில் பேசப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்த கட்டமாக சீமைக்கருவேல மரம் இல்லாத ஊராட்சியாக மாற்றுவதே இலக்காகும் என்றார்.

பிரதமர் மோடி பாராட்டு
நேற்று முன்தினம் மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, காஞ்சிரங்காலில் தொடங்கப்பட்டுள்ள பயோ கேஸில் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்கு பாராட்டு தெரிவித்தார். தமது தேவைகளை தாமே பூர்த்தி செய்வதன் மூலம் காஞ்சிரங்கால் ஊராட்சி நாட்டுக்கே முன்னுதாரணமாக திகழ்கிறது’ என்றார்.

Tags : Modi ,Kanjirangal , Production of electricity from vegetable and food waste in Kanjirangal panchayat praised by Prime Minister Modi: exemplifies
× RELATED “இவர்களின் அமைதி ஆபத்தானது”: பிரதமர்...