×

வாடிப்பட்டியில் ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தென்னகத்து வேளாங்கண்ணி என்றழைக்கப்படும் புகழ்வாய்ந்த ஆரோக்கிய அன்னை திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் ஆரோக்கிய அன்னையின் பிறப்பு பெருவிழா, இறைவார்த்தை சபை எஸ்விடி 146வது பிறப்பு விழா மற்றும் அற்புத ஜீவ ஊற்று இயேசுவின் அருமருந்து 21வது ஆண்டு பிறப்பு விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. திருத்தல அதிபர் அந்தோணி ஜோசப் தலைமையில் அன்னையின் கொடியேற்றமும், சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.

இன்று முதல் (செப். 31) செப்.7ம் தேதி வரை தினமும் மாலை 6 மணிக்கு நவநாள் திருப்பலி நடைபெறுகிறது. செப்.8ம் தேதி முக்கிய விழாக்களுள் ஒன்றாக முப்பெரும் விழா கூட்டு திருப்பலியை இறைவார்த்தை சபை மாநில அதிபர் சாந்துராஜாவும், மாலை 6 மணிக்கு மதுரை உயர்மறை மாவட்ட முதல்வர் ஜான்திரவியமும் நடத்துகின்றனர். 9ம் தேதி காலை 6.30 ஆரோக்கிய அன்னையின் திருக்கொடி பங்குதந்தை ஆரோக்கியதாஸ் தலைமையில் இறக்கப்பட்டு நன்றி திருப்பலியுடன் விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை எஸ்விடி அதிபர் நிர்வாகி அந்தோனிஜோசப், எஸ்விடி பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ், உதவி பங்குதந்தை குழந்தை யேசுதாஸ் மற்றும் இருபால் துறவியர் ஆகியோர் செய்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கினால் இந்த ஆண்டு திருவிழா மக்கள் பங்கேற்பின்றி நடைபெறும். கொடிப்பவனி, நற்கருணை பவனி, சப்பரப்பவனி ஆகியவை நடைபெறாது. பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லாததால் வீட்டிலிருந்தே வலைதளம் மூலம் நேரலையில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று  திருத்தல நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags : Wellness Mother Temple festival ,Waddipati , The Health Mother Temple Festival in Vadippatti started with flag hoisting
× RELATED போலி சான்றிதழ்களை தடுக்க நடவடிக்கை...