×

யு.எஸ்.ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் ஆண்டி முர்ரே போராடி தோல்வி

நியூயார்க்: யு.எஸ். ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முன்னாள் சாம்பியன் ஆண்டி முர்ரே, 5 செட்களில் கடும் போராட்டத்திற்கு பின்னர் சிட்சிபாசிடம் தோல்வியடைந்தார். இந்த ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான, யு.எஸ். ஓபன் நியூயார்க்கில் இந்திய நேரப்படி நேற்று இரவு துவங்கியது. யு.எஸ்.ஓபன் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே , காயம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கவில்லை. அறுவை சிகிச்சைக்கு பின்னர், உடல் நலம் தேறிய அவர், மீண்டும் யு.எஸ்.ஓபன் மூலம் சர்வதேச டென்னிசுக்கு திரும்பினார். நேற்று நடந்த முதல் சுற்றுப் போட்டியில் அவர், கிரீஸ் வீரர் ஸ்டெஃபனாஸ் சிட்சிபாசுடன் மோதினார். ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டியில், ஆண்டி முர்ரே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்றே கூற வேண்டும்.

ஸ்டெஃபனாஸ் சிட்சிபாஸ் ஏடிபி தரவரிசையில் தற்போது 3ம் இடத்தில் உள்ளார். கடந்த 2016ம் ஆண்டு தொடர்ந்து 41 வாரங்கள் ஏடிபி தரவரிசையில் முதலாம் இடத்தில் இருந்த ஆண்டி முர்ரே, தற்போது 112ம் இடத்தில் உள்ளார். இதுவரை ஆடவர் ஒற்றையரில் 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள முர்ரே, சிட்சிபாசுக்கு எதிரான இந்த முதல் சுற்றுப் போட்டியில் 6-2 என முதல் செட்டை எளிதாக கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் மிரட்டிய அவர், டைபிரேக்கரில்தான் அந்த செட்டை 6-7 என்ற கணக்கில் இழந்தார். மறுபடி 3வது செட்டை 6-3 என முர்ரே கைப்பற்ற, போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியது.
ஆனால் இளம் வீரரான சிட்சிபாஸ், 4வது மற்றும் 5வது செட்டை 6-3, 6-4 என கைப்பற்றி, ஒருவழியாக வெற்றி பெற்றார்.நேற்று நடந்த ஆடவர் முதல் சுற்றுப் போட்டிகளில் முன்னணி வீரர்கள் பல்கேரியாவின் கிரிகோர் டிமிரிடோவ், ஆஸி.வீரர் அலெக்சி பாப்பிரின், நார்வே வீரர் காஸ்பர் ரூட் ஆகியோரும் வெற்றி பெற்று, 2ம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் உக்ரைன் வீராங்கனை எலீனா ஸ்விடோலினா, பெலாரசின் விக்டோரியா அசரென்கா மற்றும் அரைனா சபலென்கா, நடப்பு பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் செக். குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா, ஜப்பான் நட்சத்திரம் நவோமி ஒசாகா ஆகியோர் முதல் சுற்றுப் போட்டிகளில் வெற்று பெற்றுள்ளனர்.

சர்ச்சையில் சிட்சிபாஸ்
4 மணி நேரம் 48 நிமிடம் நடந்த இப்போட்டியில் தோல்விக்கு பின்னர் மனக்கசப்புடன் காணப்பட்ட முர்ரே கூறுகையில், ‘‘3வது செட்டை நான் கைப்பற்றியதும், காலில் காயம் என சிட்சிபாஸ் மெடிக்கல் பிரேக் எடுத்துக் கொண்டார். ஆனால் அதுவரை அவரது மூவ்மென்ட்டுகளின் மூலம் அவரது காலில் காயம் ஏற்பட்டதாக தெரியவில்லை. அதேபோல் 5வது செட்டில் பாத்ரூம் செல்கிறேன் என 9 நிமிடங்கள் பிரேக் எடுத்துக் கொண்டார். இதனால் மைதானத்தில் நான் வெறுமனே அமர்ந்திருந்தேன். அது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது’’ என்று குற்றம்சாட்டினார்.

சிட்சிபாஸ் கூறுகையில், ‘‘ஏடிபி விதிமுறைகளின்படியே நான் பிரேக் எடுத்துக் கொண்டேன். பாத்ரூம் சென்ற நான், உடைகளை முழுவதுமாக மாற்றிக் கொண்டு வந்தேன். இதில் ஏதும் தவறில்லை’’ என்று தெரிவித்தார். சிட்சிபாஸ் மீதான இந்த குற்றச்சாட்டு 2வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. 2 வாரங்களுக்கு முன்னர் நடந்த சின்சினாட்டி ஓபனில் அலெக்சாண்டர் ஸ்வரெவுக்கு எதிரான போட்டியிலும், பின்தங்கிய நிலையில் இருந்த அவர், இதேபோல பாத்ரூம் சென்று வருகிறேன் என்று 10 நிமிடம் பிரேக் எடுத்தார். அப்போது அவர் செல்போன் மூலம், தனது பயிற்சியாளரிடம் பேசி, ஆலோசனைகளை பெற்றார் என்று ஸ்வரெவ் குற்றம் சாட்டியிருந்தார்.


Tags : Andy Murray ,US Open , U.S. Open, tennis, Andy Murray, defeat
× RELATED அபுதாபி ஓபன் காலிறுதியில் ஆன்ஸ்