திண்டுக்கல் மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்-பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு திண்டுக்கல் கே.ஆர். நகரில் உள்ள ஸ்ரீரூப கிருஷ்ணன் கோயிலில் நேற்று காலை சிறப்பு பூஜை நடந்தது. இதில், ஸ்ரீ வைகுண்ட நாதர் அவதாரத்தில் பெருமாள் எழுந்தருளினார். இதையொட்டி கிருஷ்ணர் சிலைக்கு பால், பன்னீர், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம், இளநீர், கரும்புசாறு, அன்னம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகத்துடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. ஒய்.எம்.ஆர்.பட்டியில் உள்ள கிருஷ்ணன் கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது.

இதேபோல, திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் சீனிவாசப்பெருமாள் கோயிலில் உள்ள ஸ்ரீ  கிருஷ்ணர் சன்னதியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணருக்கு பால், பன்னீர், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம், இளநீர், கரும்பு சாறு, சொர்ணம், அன்னம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது. பிறகு ஆராதனை மற்றும் சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணர் தோன்றி பக்தர்களுக்கு அருள்பாளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அனைவருக்கும் கோவில் நிறுவாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

சின்னாளபட்டி: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ரெட்டியார்சத்திரத்தில் உள்ள மலைக்கோவிலான கோபிநாதர் சுவாமி திருக்கோவிலில் உள்ள மூலவரான கோபிநாதர் சுவாமிக்கு வெள்ளிக்கவசத்துடன் சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர். அவருடைய தாயாரான கோப்பம்மாள் சுவாமிக்கும் வெள்ளிக்கவசம் அணிவித்து அலங்காரம் செய்திருந்தனர். காலை 6 மணியளவில் சுதர்சன ஹோமம் துவங்கியது. அதன்பின் பூஜைகள், வழிபாடுகள் முடிந்த பின்பு வெள்ளிக்கவசம் அணிவித்து சிறப்பு தீபராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்கள்

வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதேபோல ரெட்டியார்சத்திரம் கதிர்நரசிங்க பெருமாள் கோவிலில் உள்ள மூலவரான கதிர்நரசிங்க பெருமாளுக்கு சுயம் திருமேனி அலங்காரம் செய்திருந்தனர். அதிகாலை முதல் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

ஸ்ரீஅஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு:சின்னாளபட்டி மேட்டுப்பட்டியில் ஸ்ரீ அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோவில் உள்ளது. இக்கோயிலில் ஆஞ்சநேயருக்கு கனிக்காப்பு அலங்காரம், செந்தூர காப்பு அலங்காரம், ஸ்ரீ திருப்பதி ஏழுமலையான் அலங்காரம், பஞ்சமுக அலங்காரம், சரபோஜி மன்னர் அலங்காரம், தியானமாருதி அலங்காரம், கரும்புகாப்பு அலங்காரம், பாலமாருதி அலங்காரம், சுயம்திருமேனி அலங்காரம் உட்பட 20க்கும் மேற்பட்ட சிறப்பு அலங்காரங்களை செய்வது வழக்கம்.

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு (கோகுலாஷ்டமி) முன்னிட்டு நேற்று கோயிலில் உள்ள மூலவரான ஆஞ்சநேயருக்கு கையில் புல்லாங்குழலுடன் தலையில் டர்பன், தலைப்பாகை, நீலி மயில் இறகுடன் தங்க பூனூல் அனிவித்து துவாரக கிருஷ்ணர் சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர். இதைக் காண பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

Related Stories:

More