முதுமலை புலிகள் காப்பக வளர்ப்பு யானைகளுக்கு எடை பரிசோதனை

கூடலூர் : நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள்  காப்பகம் தொரப்பள்ளி வனத்துறை சோதனைச் சாவடியில் உள்ள எடை மேடையில்  வளர்ப்பு யானைகளுக்கு எடை பரிசோதனை செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூரை  அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு மற்றும் அபயரண்யம்  ஆகிய இடங்களில் இரண்டு வளர்ப்பு யானைகள் முகாம்கள் உள்ளன. இங்கு குட்டிகள்,  கும்கி, ஓய்வுபெற்ற யானைகள் என 28 யானைகள் பராமரிக்கப்படுகின்றன.

இந்த  யானைகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எடை பரிசோதனை மேற்கொள்ளப்படும்.  யானைகளின் வயது, உயரம் இவற்றிற்கு ஏற்ப பராமரிப்பு  பணி மேற்கொள்ளப்பட்டு வருவதால் இந்த எடை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. முதுமலை  முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளில் சில கும்கி யானைகள், காட்டு யானைகளை  விரட்டும் பணிகளில் ஈடுபட்டுள்ளதால் இங்குள்ள வயதான யானைகள் மற்றும் குட்டிகள்  தவிர்த்து 11 யானைகளுக்கு நேற்று  எடை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

முதுமலை புலிகள்  காப்பகம் தொரப்பள்ளி வனத்துறை சோதனைச் சாவடியில் உள்ள எடை மேடையில்  வளர்ப்பு யானைகளுக்கு எடை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில்,  மூர்த்தி என அழைக்கப்படும் மக்னா யானை 120 கிலோ எடை குறைந்துள்ளதாகவும்,  கிரி என்ற யானை 50 கிலோ எடை கூடுதலாக உள்ளதாகவும், சராசரியாக யானைகள் 50  முதல் 150 கிலோ வரை எடை கூடியும், குறைந்தும் காணப்படுவதாகவும் வனத்துறையினர்  தெரிவித்தனர். பொதுவாக, யானைகள் மஸ்து காலங்களில் உணவு குறைவாக  எடுப்பதால் அவற்றின் எடை குறையும் என்றும், பின்னர் அவற்றின் எடை சீரடையும்  என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: