3 நாள் தொடர் விடுமுறையில் ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு 10 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை-வியாபாரிகள் மகிழ்ச்சி

ஊட்டி : வார  விடுமுறை மற்றும் கிருஷ்ணர் ஜெயந்தி என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை  வந்த நிலையில், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு பல மாதங்களுக்கு பின் 10  ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இருந்த  போதிலும், தொடர் அரசு விடுமுறை, பண்டிகை விடுமுறை போன்ற நாட்களில் சுற்றுலா  பயணிகள் வருகை அதிகம் வருவது வழக்கம்.

அண்டை மாநிலங்களான கர்நாடகம்  மற்றும் கேரளாவில் ஏதேனும் அரசு பொது விடுமுறை அல்லது பண்டிகை விடுமுறை  வந்தால், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும்.  இந்நிலையில், வார விடுமுறை மற்றும் கிருஷ்ணர் ஜெயந்தி என மூன்று நாட்கள்  தொடர் விடுமுறை வந்ததால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டி வந்தனர். மூன்று நாட்களாக தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் மற்றும்  பைக்காரா போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. கடந்த 28ம் தேதி 3 ஆயிரத்து 664 பேரும், 29ம் தேதி 4 ஆயிரத்து 572 பேரும், நேற்று 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளும்  வந்திருந்தனர். கடந்த மூன்று நாட்களில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் சுற்றுலா  பயணிகள் வந்திருந்தனர்.

 கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக  சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டிருந்தது.சுற்றுலா தலங்களும்  மூடப்பட்டிருந்தன. இதனால், சுற்றுலா பயணிகள் வராமல் ஊட்டியில் உள்ள  வியாபாரிகள் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், பல மாதங்களுக்கு பின்  கடந்த ஒரு வாரமாக ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது  வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Related Stories: