×

காரைக்கால் அடுத்த நிரவியில் சதுர்த்தி விழாவுக்கு தயாராகும் விநாயகர் சிலைகள்

காரைக்கால் : காரைக்காலை அடுத்த நிரவியில் விநாயகர் சதுர்த்திக்காக ஆண்டுதோறும் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 10ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக விதவிதமான விநாயகர் சிலைகள் முக்கிய இடங்களை வைத்து விஜர்சனம் செய்ப்பட்டும், 3ம் நாள் நீர்நிலைகளில் பிரதிஸ்டை செய்வார்கள். ஆண்டுதோறும் இந்த விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா தொற்றையடுத்து கடும் கட்டுபாடுகளை அரசு விதித்ததால் விழா கலையிழந்தது.

இந்நிலையில் இந்தாண்டு விழாவிற்காக விநாயகர் சிலைகள் தயார் செய்ய, விழுப்புரம் அருகேயுள்ள அரசூர் என்ற ஊரிலிருந்து மூலப்பொருட்கள் வாங்கி வரப்பட்டு காகித கூழ், கிழங்கு மாவு, சிமெண்ட் பேப்பர் உள்ளிட்ட இயற்கையான பொருட்களை கொண்டு வினாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. வர்ணமும் வாட்டர் கலர் என்பதால் சிலைகளை கரைக்கும் போது எளிதில் கரையும் தன்மை கொண்டுள்ளதோடு, மாசு ஏற்படா வண்ணம் இவை தயாரிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சிலை தயாரிப்பாளர் வீரமணி கூறும்போது, வித, விதமாக வினாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. மயில், மான், சிங்கம், யானை மற்றும் வினாயகரின் வாகனமான மூஞ்சூர் உள்ளிட்ட வாகனங்களின் மீது வினாயகர் அமர்ந்த நிலையில் சிலைகள் உள்ளன. வழக்கமாக ஒரு அடி முதல் 15 அடிவரை வினாயகர் சிலைகள் உருவாக்கப்படும். ஆனால் இந்தாண்டு 2 அடி முதல் 7 அடி வரையிலேயே சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதேபோல ஆண்டுதோறும் 700 சிலைகள் வரை உருவாக்கப்பட்டு வந்த நிலையில் இந்தாண்டு 250 சிலைகள் மட்டுமே செய்துள்ளோம் என்றார். நிரவியில் தயாரிக்கப்படும் சிலைகள் காரைக்கால் மாவட்டம் மட்டுமின்றி நாகப்பட்டினம், திருவாரூர். தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, வேதாரண்யம், சிதம்பரம் உட்பட தென் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

காரைக்கால் மாவட்டம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கும் கொண்டு செல்லப்படும் சிலைகள் வினாயகர் சதுர்த்தியன்று நிறுவப்பட்டு வழிபாடு செய்த பின்னர் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அவைகள் நீர் நிலைகளில் கரைக்கப்படும். வினாயகர் ஊர்வலம் குறித்து தமிழக அரசு இதுவரை முடிவு ஏதும் அறிவிக்காததால் வினாயகர் சிலைகளின் விற்பனை இன்னும் சூடுபிடிக்கவில்லை.

ஊர்வலத்திற்கு அனுமதி

காரைக்காலில் ஆண்டுதோறும் ஏழை மாரிம்மன் கோவிலில் இருந்து புறப்படும் வினாயகர் சிலைகளின் ஊர்வலம் மேள, தாள வாத்தியங்களுடன் காரைக்காலின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கிளிஞ்சல்மேடு மீனவர் கிராமத்தில் முடிவடையும். பின்னர் சிலைகள் அங்குள்ள கடலில் கரைக்கப்படும். இந்த ஆண்டு வினாயகர் ஊர்வலம் 12ம் தேதி 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது. பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து வினாயகர் ஊர்வலத்தை நடத்திக்கொள்ள காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன்சர்மா சிறப்பு அனுமதி அளித்துள்ளார்.

Tags : Ganesha ,Chaturthi festival ,Niravi ,Karaikal , Karaikal: Ganesha statues are being made every year for Ganesha Chaturthi at the next Niravi in Karaikal.
× RELATED பதினோரு விநாயகர்களின் பரவச தரிசனம்