அமெரிக்காவில் அதிதீவிரமாக பரவும் கொரோனா கொல்லுயிரி!: நிரம்பி வழியும் படுக்கைகள்..ஒருநாள் பாதிப்பு 1.50 லட்சத்தை கடந்தது..!!

வாஷிங்டன்: அமெரிக்காவில் அதி தீவிரமாக மீண்டும் கொரோனா பரவல் பரவி வருவதால் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 78 சதவீத படுக்கைகள் நிரம்பி உள்ளன. இதனால் அங்குள்ள மருத்துவத்துறையினருக்கு மீண்டும் சவாலான சூழல் எழுந்துள்ளது. உலக வல்லரசாக கருதப்படும் அமெரிக்கா தான் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு நாடாக உள்ளது. கொரோனா முதல் அலை பரவ தொடங்கிய போதே அங்கு பலர் உயிரிழந்தனர். அமெரிக்க அதிபராக பைடன் பொறுப்பேற்ற பின்னர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அதிகம் முக்கியத்துவம் அளித்தார். மேலும், கொரோனா வேக்சின் பணிகளை அதிகரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் அங்கு எடுக்கப்பட்டன.

இதனால் கொரோனா கட்டுக்குள் வர தொடங்கியது. இதையடுத்து 2 டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டவர்கள் இனி பொதுவெளியில் முகக்கசவம் அணிய தேவையில்லை என்ற தளர்வு அளிக்கப்பட்டதன் விளைவாக அமெரிக்காவில் தற்போது கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சத்தை அடைய காரணமாக அமைந்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் சராசரியாக 11 ஆயிரமாக இருந்த கொரோனா பாதிப்பு, அடுத்த 2 மாதங்களில் ஒன்றரை லட்சமாக மாறியுள்ளது. லட்சக்கணக்கானோர் தற்போது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் பெரியவர்களில் 3ல் ஒருபங்கு நோயாளிகள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர்.

1 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளும் டெல்டா வகை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி மரணமடைபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. அமெரிக்காவில் அதிகம் நோய் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் புளோரிடாவில் உள்ள மருத்துவமனைகளில் அனைத்து படுக்கைகளும் நிரம்பிவிட்டன. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மருத்துவர்கள் செய்வதறியாமல் திணறி வருகின்றனர். தடுப்பூசி போடாவிடில் இந்த சூழல் மேலும் மோசமாகும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>