பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப் பொருள் விற்போருக்கு கடும் தண்டனை தர புதிய சட்டம்; போதை பொருட்கள் விற்பனை முற்றிலும் தடுக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சட்டமன்றப் பேரவையில், வினா-விடை நேரத்தில், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக ஜி.கே.மணி எழுப்பிய வினாக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்தார்.  இந்த அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து, 29-8-2021 வரை தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என முதல்வர் பதிலளித்தார். இதனை விற்பவர்கள், கடத்துபவர்கள் ஆகியோர் மீது 10 ஆயிரத்து 673 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 11 ஆயிரத்து 247 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து 149.43 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 113 நான்கு சக்கர வாகனங்களும், 106 இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

15 பேர் குண்டர் சட்டத்திலே கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்றது மற்றும் கடத்தியது தொடர்பாக 2,458 வழக்குகள் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் பதிவு செய்யப்பட்டு, 5,793 கிலோ கஞ்சா மற்றும் இதர போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  3,413 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களில் 81 பேர் குண்டர் சட்டத்திலே அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.  போதைப் பொருட்கள் விற்பனை செய்வோர் மற்றும் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, போதைப் பொருள் விற்பனை முற்றிலும் தடுக்கப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் மூலமாக, மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

கோ.க. மணி சொன்னதுபோல, ஏற்கெனவே போதை மற்றும் மன மயக்கப் பொருட்கள் தடைச் சட்டம் 1985-ன்கீழ், நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகிலே போதைப் பொருட்கள் விற்பனை செய்வோருக்குக் கடுமையான தண்டனைகள் வழங்க அந்தச் சட்டத்திலே புதிய திருத்தங்கள் கொண்டு வரப்படும்.  புதிய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, உரிய நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும். காவல் துறையினரை ஊக்குவிக்க நிச்சயம் இந்த அரசு தயங்காது. இதுகுறித்து பரிசீலித்து, ஆராய்ந்து, என்னென்ன வகையிலே அவர்களுக்கு சிறப்பு செய்ய வேண்டுமோ, அதைப் பரிசீலித்து, அவர்களுக்குரிய ரிவார்டு நிச்சயம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Related Stories:

>