பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் ஒன்றிய அரசின் முடிவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..!!

சென்னை: பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் ஒன்றிய அரசின் முடிவை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து கழகம் முன்பாக தொழிற்சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆயுள் காப்பீட்டு கழகங்கள், ரயில்வே, விமான நிலையங்கள் போன்ற அரசு சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்க்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. அதன் மூலம் 6 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்த முடிவை கண்டித்தும், அதற்கான அவசர சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் பல்லவன் பணிமனை முன்பாக திரண்ட போக்குவரத்து தொழிற்சங்க ஊழியர்கள், ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். காலை 6 மணி வரை பேருந்தை நிறுத்தி வைத்து அவர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இதேபோல் பெரம்பூர், வடபழனி, தாம்பரம் உள்ளிட்ட பணிமனை வாயில் முன்பாக தொ.மு.ச. உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் திரண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். கும்பகோணத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., எ.ஐ.டி.யு.சி. உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விலைவாசி உயர்வால் பொதுமக்கள் திண்டாடி வரும் நிலையில் ஒன்றிய அரசு, அரசு சொத்துக்களை தனியாருக்கு தாரைவார்க்கும் அவசர சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதேபோல், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் ஒன்றிய அரசின் முடிவை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் உட்பட 12 பணிமனையில் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் போக்குவரத்து பணிமனை முன்பாக திரண்ட அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கண்டனத்தை பதிவு செய்தன.

திருத்துறைப்பூண்டி அரசு போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தனியாருக்கு தாரைவார்க்கும் ஒன்றிய அரசின் அவசர சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. திருவண்ணாமலையிலும் தண்டராம்பட்டு சாலையில் உள்ள பணிமனை அலுவலகம் முன்பாக திரண்டு தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களுடன் ஒன்றிணைந்து போக்குவரத்துத்துறை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories:

>