பதிவுத்துறையில் 2 உதவி ஐஜிக்கள் மாற்றம்: ஒரே மாவட்டத்தில் 10 ஆண்டுகளாக பணியாற்றும் வேலுமணி ஆதரவாளர்

சென்னை: தென் சென்னை, மதுரை வடக்கு மாவட்ட பதிவுத்துறை உதவி ஐஜிக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் கடந்த 10 ஆண்டுகளாக வேலுமணியின் ஆதரவு மாவட்ட பதிவாளர் ஒருவர் கோவை மாவட்டத்தில் பணியாற்றி வரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சராக மூர்த்தி பதவி ஏற்ற பிறகு, பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில், தவறு செய்கிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.  அதில், தென் சென்னை பதிவு மாவட்டத்தில் உதவி ஐஜியாக இருந்த ரவீந்திரநாத், மதுரை வடக்கு பதிவு மாவட்ட உதவி ஐஜியாகவும், இந்த பதவியில் இருந்த மீனாகுமாரி தென் சென்னை பதிவு மாவட்ட உதவி ஐஜியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி பிறப்பித்துள்ளார்.

அதேநேரத்தில், கோவை மாவட்ட (ஆடிட்) பதிவாளராக செல்வக்குமார் பணியாற்றி வருகிறார். இவர், அமைச்சர் வேலுமணியின் தீவிர விசுவாசி. கடந்த 10 ஆண்டுகளாக கோவை மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார். பதிவுத்துறையில் பல்வேறு ஐஜிக்கள் பணியாற்றினாலும், இவரை மட்டும் மாற்ற முடியாமல் இருந்தனர்.

வேலுமணிக்கு பக்கபலமாகவும், அவரது சொத்துகளை கவனிப்பவராகவும் இவர் இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் அமைச்சரின் ஆதரவு இருந்ததால் அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்க முடியாமல் இருந்தது. இப்போதும் சில உயர் அதிகாரிகளின் துணையுடன் பணி மாறுதல் இல்லாமல் தப்பித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: