×

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளை முதல் 200 கொரோனா தடுப்பூசி முகாம்: காலை 8.30-மாலை 4 மணி வரை செயல்படும்

சென்னை: சென்னை மாநகராட்சியில் ஒரு வார்டுக்கு ஒரு தடுப்பூசி முகாம் என்ற அடிப்படையில் 200 வார்டுகளிலும் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை முதல் செயல்படும், என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் காசநோய் பாதித்த நபர்களை பாதுகாக்கும் வகையில், மாநகராட்சி சார்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.  மேலும், குடிசைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதையொட்டி, கடந்த 28ம் தேதி முதல் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. அதை தொடர்ந்து நாளை முதல் 112 கல்லூரிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஒரு மண்டலத்திற்கு 3 கொரோனா தடுப்பூசி முகாம்கள் என 45 தடுப்பூசி முகாம்கள் பள்ளிகள், மாநகராட்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் செயல்பட்டு வருகிறது.  
தற்போது பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், பள்ளிகளில் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்கள் நாளை முதல் வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது. மேலும், 45 இடங்களில் நடத்தப்பட்டு வந்த தடுப்பூசி முகாம்கள் நாளை முதல் (1ம் தேதி) ஒரு வார்டுக்கு ஒரு முகாம் என 200 வார்டுகளிலும் தடுப்பூசி முகாம்கள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 26ம் தேதி 200 வார்டுகளில் நடத்தப்பட்ட 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் ஒரு லட்சத்து 35 ஆயிரம் நபர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.

பொதுமக்களின் இல்லங்களுக்கு அருகாமையில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்ட காரணத்தினால் தடுப்பூசி செலுத்துவதில் பலர் ஆர்வம் காட்டியுள்ளனர்.  இதனைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சியில் ஒரு வார்டுக்கு ஒரு தடுப்பூசி முகாம் என 200 வார்டுகளிலும் தடுப்பூசி முகாம்கள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. பொதுமக்கள் தங்களது வார்டுக்கான தடுப்பூசி முகாம்கள் குறித்த விவரங்களை மாநகராட்சியின் http://covid19.chennaicorporation.gov.in/covid/gcc_vaccine_centre/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும், இந்த 200 வார்டுகளில் உள்ள தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நேரம் மற்றும் இடத்தை தேர்வு செய்ய மாநகராட்சியின் gccvaccine.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த தடுப்பூசி முகாம்கள் நாள்தோறும் காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். சென்னை மாநகராட்சியில் கடந்த 29ம் தேதி வரை 27,17,705 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 12,11,775 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் என மொத்தம் 39,29,480 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எனவே, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : 200 Corona Vaccination Camp ,Chennai Corporation , Corporation of Chennai
× RELATED திருவான்மியூர் கடற்கரையில் வானில்...