×

டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் 2 தங்கம் வென்று இந்தியா சாதனை: அவனி, சுமித் அசத்தல்

டோக்கியோ: பாரா ஒலிம்பிக் போட்டித் தொடரில் இந்தியா நேற்று ஒரே நாளில் 2 தங்கப் பதக்கம் உள்பட 5 பதக்கங்களை வென்று சாதனை படைத்தது. மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 24ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா சார்பில் 14 வீராங்கனைகள் உள்பட 54 பேர் களமிறங்கி உள்ளனர். முதல் 4 நாட்களில் பதக்கம் ஏதும் கிடைக்காத நிலையில், நேற்று முன்தினம் 2 வெள்ளி, 1 வெண்கலம் வென்று இந்தியா பதக்க வேட்டையை தொடங்கியது. மகளிர் டேபிள் டென்னிசில் பவினா பென், ஆண்கள் உயரம் தாண்டுதலில் நிஷத் குமார் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். வட்டு எறிதலில் வினோத் குமார் வெண்கலம் வென்றார்.

இந்த நிலையில், நேற்று நடந்த மகளிர் துப்பாக்கிசுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெகரா தங்கப் பதக்கம் வென்றார். பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையும் அவர் வசமானது. இது நடப்பு தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கப் பதக்கமாகும். அடுத்து ஆண்கள் வட்டு எறிதல் எப்-56 பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் யோகேஷ் கதுனியா 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை முத்தமிட்டார்.

இதைத் தொடர்ந்து, ஆண்கள் ஈட்டி எறிதல் எப்-46 பிரிவில் இந்திய வீரர்கள் தேவேந்திரா வெள்ளிப் பதக்கத்தையும், சுந்தர் சிங் குர்ஜார் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றி அசத்தினர். ஒரே போட்டியில் இந்தியாவுக்கு 2 பதக்கம் கிடைத்ததால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அவர்களது உற்சாகத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், ஆண்கள் ஈட்டி எறிதல் எப்-64 பைனலில் களமிறங்கிய இந்திய வீரர் சுமித் அன்டில் அபாரமாக செயல்பட்டு உலக சாதனையுடன் (68.55 மீ.) தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார். இதன் மூலமாக, நேற்று ஒரே நாளில் இந்தியாவுக்கு 2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கங்கள் கிடைத்தன. பாரா ஒலிம்பிக் வரலாற்றில் இதுவும் இந்திய அணிக்கு புதிய சாதனையாக அமைந்தது. பதக்க பட்டியலில் பின்தங்கியிருந்த இந்தியா, ஒரேயடியாக 42 இடங்கள் முன்னேறி 26வது இடத்தை பிடித்துள்ளது. 


Tags : India ,Tokyo Paralympics ,Avani ,Sumit Asathal , Tokyo, Paralympic
× RELATED மோடி அரசு தரும் நெருக்கடி:...