பாஜவின் ‘பி’ டீம் தான் சீமான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்:'காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி குற்றச்சாட்டு

சென்னை: காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி வெளியிட்ட வீடியோ:  ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருக்கக்கூடிய சீமான் கொஞ்சம் கூட பொறுப்பும், கூச்சமோ இல்லாமல் தமிழ்நாடே பார்த்து அதிர்ச்சியடைந்த பாஜ கே.டி.ராகவனுடைய வீடியோவை பாலியல் அத்துமீறல், சுரண்டலை ஆதரிப்பது ரொம்ப அதிர்ச்சியாக இருக்கிறது. வேற யாரும் செய்யாததையா ராகவன் செய்து விட்டார் என்று கூச்சம் இல்லாமல் சீமான் கேட்கிறார். காலம் காலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. அதற்காக அதெல்லாம் சரியென்று ஆகிவிடுமா? இல்லை அந்த குற்றத்தில் ஈடுபட்ட கொடும் குற்றவாளிகள் எல்லாம் நிரபராதியாகி விடுவார்களா? எப்படி காலம் காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்து கொண்டு இருக்கிறதோ அதைபோல அதற்கு எதிரான போராட்டங்களும் நடந்துகொண்டுதான் இருக்கிறது என்பதை சீமான் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பல போராட்டங்களுக்கு மத்தியில் பொதுவாழ்க்கைக்கு வரும் பெண்கள் மரியாதையுடன், கண்ணியத்துடன், பாதுகாப்புடன் நடத்தப்பட வேண்டும். அப்படி இல்லாமல் பெண்களிடம் முறைகேடாக அத்துமீறி நடந்து கொண்டால் அவர்கள் கண்டிக்கப்பட வேண்டும், தண்டிக்கப்பட வேண்டும். அதுதான் நாகரிக சமூகத்தின் கடமை. தமிழ் சமூகம் ஒரு போதும் பெண்களிடம் முறைகேடாக நடந்து கொள்ளும் அயோக்கியர்களையும், அவர்களை அப்பட்டமாக ஆதரிக்கிறவர்களையும் ஏற்றுக் கொள்ளாது. இது தான் சீமான் போன்றவர்களை உறுத்துகிறது. அதனால் தான் கேடுகெட்ட சமூகம் என்று ெசால்கிறார்.   ஏன் சீமான் ராகவனை ஆதரிக்கிறார் என்று யோசித்து பார்க்க வேண்டும். சீமான் மீதும் கடந்த காலத்தில் பாலியல் குற்றச்சாட்டுகள் இருந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

தன்னுடைய குற்றத்தை மறைக்க தான் சீமான் ராகவனை ஆதரிக்கிறார் என்று சந்தேகம் வருகிறது. அதுமட்டுமல்ல சீமான் பாஜவின் ‘பி’ டீம் தான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். எப்படி இருந்தாலும் சீமானுடைய செயல் வெட்கக்கேடானது. சீமான், ேக.டி.ராகவன் போன்றவர்களின் வளர்ச்சி தமிழகத்திற்கு குறிப்பாக தமிழக பெண்களுக்கு ஆபத்தானது. குறிப்பாக தமிழகத்தின் எதிர்காலமாக இருக்கக்கூடிய இளைஞர்கள், மாணவர்கள் சீமான் போன்றவர்களின் பொய்முகத்தை புரிந்து கொண்டு அவர்களை புறக்கணிக்க வேண்டும். அது தான் தமிழ் சமூகத்திற்கு செய்கிற மிகப்பெரிய தொண்டாகும்.

Related Stories:

>