காவல்துறை, தீயணைப்பு, நகராட்சி நிர்வாகம், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 592.89 கோடியிலான திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்: துறை அமைச்சர்கள் பங்கேற்பு

சென்னை: காவல்துறை, தீயணைப்பு துறை, நகராட்சி நிர்வாக துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 592.89 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு துறைகளின் சார்பில் கட்டப்பட்ட கட்டிடங்கள் மற்றும் பல்வேறு திட்டப்பணிகளை திறந்து வைத்தார். அதன்படி, கடலூர், கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, நீலகிரி மாவட்டங்களில் இடங்களில்  53  கோடியே 11 லட்சத்து 36 ஆயிரம்  ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 359 காவலர் குடியிருப்புகள், சென்னை, கடலூர், மதுரை, விழுப்புரம், விருதுநகர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 9 கோடியே  21 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 9 காவல் நிலையக் கட்டடங்கள், கோவை, ஈரோடு, பெரம்பலூர், ராமநாதபுரம், நீலகிரி மாவட்டங்களில் 6 கோடியே 60 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 காவல்துறை கட்டடங்கள், கடலூர், ராமநாதபுரம், மதுரை, சேலம், திருவாரூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் மாவட்டங்களில் 12 கோடியே 63 இலட்சத்து 53 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 10 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையக் கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மேலும், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், திருவண்ணாமலை, தேனி, கோவை மாவட்டங்களில்  5 புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள், திருவாரூர், திருச்சி மாவட்டங்களில் 5 கோடியே 41 லட்சத்து 73 ஆயிரம்  ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறை பணியாளர்களுக்கான 30 குடியிருப்புகள், புழல் மத்திய சிறை வளாகம் மற்றும் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் 2 கோடியே 80 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை பணியாளர்களுக்கான 16 குடியிருப்புக் கட்டடங்கள் ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து,  புழல் மத்திய சிறையில் 15  கோடியே 65 லட்சத்து 29 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைக்கான 2 கட்டடங்கள்  என மொத்தம் 105 கோடியில் கட்டப்பட்ட கட்டடங்களை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்தார்.  இதேபோல், குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் வேலூர் மாநகராட்சி பகுதிகளுக்கு 234 கோடியிலான குடிநீர் அபிவிருத்தித் திட்டம், 293 குடியிருப்புகளுக்கு 140 கோடியே 22 லட்சம்  மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டம் என மொத்தம் 477  கோடியே 42 லட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற  பணிகளை முதலமைச்சர் திறந்து வைத்தார். தொடர்ந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கோவை, மயிலாடுதுறை, திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய  மாவட்டங்களில் 10 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகளிர் விடுதி, ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகளுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் ஆகிய 8 கட்டடங்களை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, கைத்தறி  மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Stories:

>