3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பேரவையில் தீர்மானம்: முதல்வருக்கு வைகோ பாராட்டு

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய பாஜ அரசு 2020 செப்டம்பரில் நாடாளுமன்றத்தில், மக்களாட்சி மாண்புகளை காலில் போட்டு மிதித்துவிட்டு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால்,வேளாண் விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதையும் இச்சட்டங்கள் உறுதிப்படுத்தவில்லை.

வேளாண் விளை பொருள் சந்தை முழுக்க முழுக்க பன்னாட்டு, உள்நாட்டு பெரு நிறுவனங்களின் பிடியில் சென்றுவிடும். மாநில அரசுகளின் அதிகாரத்தை பறித்து ஆதிக்கம் செலுத்தும் வகையில் ஒன்றிய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் பகைச் சட்டங்களும் கூட்டாட்சி கோட்பாட்டுக்கு எதிரானது. இந்நிலையில்தான் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆகஸ்ட் 28ம் நாள், ஒன்றிய அரசின் 3 வேளாண் பகைச் சட்டங்களை ரத்து செய்யக்கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். அவருக்கு என் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் பக்கம் திமுக அரசு நிற்கும் என்பதற்கு சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானம் சான்று..

Related Stories:

>