×

அதிமுக ஆட்சியில் பராமரிக்காமல் விட்டதால் அரசு உப்பு நிறுவனத்தில் பல லட்சம் ரூபாய் இழப்பு: பல ஆண்டாக பணி நிரந்தரம் கேட்கும் தொழிலாளர்கள்

சாயல்குடி::  சாயல்குடி அருகே இயங்கி வரும் அரசு உப்பளத்தை அதிமுக அரசு பராமரிக்காமல் விட்டதால், அரசுக்கு வரவேண்டிய வருவாயில் மாதம்தோறும் பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.  கடந்த 1974ல் திமுக ஆட்சியின்போது ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே வாலிநோக்கத்தில், தமிழ்நாடு அரசு உப்பு நிறுவனம் கலைஞரால் துவங்கப்பட்டது. 400 ஏக்கர் பரப்பில் உப்பளம் அமைக்கப்பட்டு, இயற்கை முறையில் அயோடின் கலந்து உப்பு தயாரிக்கப்படுகிறது. லாபத்துடன் இயங்கி வரும் இந்நிறுவனத்தில் 110க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்கள், 1,350 ஒப்பந்த பணியாளர்கள், 500க்கும் மேற்பட்ட தினக்கூலி பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.  இங்கு தயாரிக்கப்படும் உப்பு, தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு செல்வதால் தமிழக அரசுக்கு நல்ல வருவாயை ஈட்டி தருகிறது.

நாள் ஒன்றிற்கு 5 டன் வரை சுத்திகரிக்கப்பட்ட உப்பு உற்பத்தி செய்யும் திறன் வசதி உள்ளது. இதனால் மாதத்திற்கு ரூ.25 லட்சம் வரை லாபம் ஈட்டி வந்தது.  ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் போதிய பராமரிப்பின்மை, ஒப்பந்த நிறுவனங்களுக்கு காசோலை வழங்குவதில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது. மேலும் தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்களின் வாழ்க்கையும் நலிவடைந்து வருகிறது.  உப்பள தொழிலாளர்கள்(சிஐடியு)சங்க தலைவர் பச்சமாள் கூறுகையில், ‘‘கடந்த 2014ம் ஆண்டு அரசு ஒப்பந்தப்படி, உப்பள தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை முறையாக வழங்கவில்லை. தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் கடைசி வாரத்தில் வழங்கப்படுவதால் தொழிலாளர்கள் குடும்பத்தை நடத்த சிரமப்பட்டு, கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கும் நிலை உள்ளது. ரூ.8 கோடியில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையம், அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் பாதுகாப்பின்றி கிடக்கிறது.  இதை பராமரிக்க ஆண்டுக்கு ரூ.25 லட்சம் செலவு செய்தும் கூட, மழைக்கு வெளிப்புற கட்டுமானங்கள், மேற்கூரைகள் சேதமடைந்து விட்டது. போதிய பராமரிப்பு இல்லாததால் உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் தொழிலாளர்கள் வேலையை இழந்து நிற்கின்றனர். மாதந்தோறும் அரசுக்கு வரக்கூடிய ரூ.25 லட்சம் வருவாய் நின்று விட்டது’’ என்றார்.

Tags : State Salt Company , AIADMK rule, loss
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...