×

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் எம்.பி, எம்.எல்,ஏக்கள் திமுகவில் இணைந்தனர்: தஞ்சை, நாகை, தென்காசி மாவட்ட நிர்வாகிகள்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தஞ்சை, நாகை, தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.பி, எம்.எல்.ஏக்கள், ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி மன்றத்தலைவர், உறுப்பினர்கள் திமுகவில் இணைந்தனர். தமிழக முதல்வர், திமுக தலைவர் முன்னிலையில்  சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நேற்று தஞ்சை தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளரும் முன்னாள் எம்பியுமான பரசுராமன் தலைமையில் 70க்கும் மேற்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி மன்றத் தலைவர், உறுப்பினர்கள் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். அதைப்போன்று நாகை வடக்கு மாவட்டம் அதிமுகவைச் சேர்ந்த செம்பனார்கோவில் ஒன்றிய கவுன்சிலர்கள் கஞ்சா நகரம் சுப்பிரமணியம், மடப்புரம் கண்ணன் மற்றும் நீடூர், நலத்துக்குடி, ரூரல், தாலச்சேரி, மேலாநல்லூர், கீழமருதநல்லூர், மேலையூர், பாகசாலை ஆகிய ஊராட்சி மன்றத் தலைவர்கள் அதிமுக நிர்வாகிகள் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.

தென்காசி தெற்கு மாவட்டம் அதிமுகவை சேர்ந்த நெல்லை புறநகர் மாவட்ட முன்னாள் செயலாளர் கே.பி.குமார்பாண்டியன், மாநில மகளிர் அணி துணைச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.முத்துச்செல்வி, தென்காசி தெற்கு மாவட்ட சிறுபான்மை நல பிரிவு செயலாளர் சாந்தசீலன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் சண்முகவேல் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். அப்போது பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு,  துணைப் பொதுச்செயலாளர்கள் க.பொன்முடி, ஆ.இராசா, எம்.பி., உயர்நிலை  செயல்திட்டக்குழு உறுப்பினர் எ.வ.வேலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,  எம்.பி, துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தஞ்சை மத்திய மாவட்டப்  பொறுப்பாளர் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ தஞ்சாவூர் நகரச் செயலாளரும் -  தஞ்சாவூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டி.கே.ஜி. நீலமேகம், எம்.எல்.ஏ.,  ஒரத்தநாடு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.இராமச்சந்திரன், தலைமை  நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன், மாவட்டப்  பொருளாளர் எல்.ஜி.அண்ணா, தஞ்சை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் செல்வகுமார், தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன்  ஆகியோர் உடனிருந்தனர்.

 அப்போது திமுகவில் இணைந்த பரசுராமன் நிருபர்களிடம்: அதிமுகவின் உண்மை தன்மை குறைந்து விட்டது. அதிமுக இன்றைக்கு சிதறி, கிழிந்த சேலை போல ஆகிவிட்டது. இனி அதிமுக விரைவில் இல்லாமல் போய் விடும் என்ற நிலை இன்றைக்கு உருவாகியிருக்கிறது. அதை எண்ணிக் கொண்டு மக்களுக்காக மக்கள் பணியில் மிக சிறப்பாக செயலாற்றும் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாங்கள் செயல்படுவதை விரும்பி வந்திருக்கிறோம். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, குற்றச்சாட்டு முழுவதும் உங்களுக்கு தெரிந்து இருக்கும். நான் எந்த பதவியும் திமுகவில் கேட்கவில்லை. இணைந்தவர்கள் மக்களுக்காக சிறப்பாக செயல்படுவார்கள்.

Tags : AIADMK ,DMK ,Chief Minister ,MK Stalin ,Tanjore ,Nagai ,Tenkasi , Chief MK Stalin
× RELATED அவதூறு பேச்சுக்காக எடப்பாடி பழனிசாமி...