×

திருப்பதி தேவஸ்தானம் அதிரடி: இயற்கை பொருட்களில் தயாரித்த உணவு விற்பனைக்கு திடீர் தடை

திருமலை: இயற்கை பொருட்களில் தயாரித்த உணவு விற்பனை திட்டத்திற்கு திருப்பதி தேவஸ்தானம் தடைவிதித்துள்ளது.திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இயற்கை வேளாண் பொருட்களை கொண்டு மலிவு விலையில் உணவு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டது. இதற்கான சோதனை ஓட்டம் கடந்த 3 நாட்களாக நடந்து வந்தது. இந்நிலையில் இந்த திட்டத்தை ரத்து செய்வதாக தேவஸ்தானம் நேற்று அதிரடியாக அறிவித்தது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது: ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம்  செய்ய வரும் பக்தர்களுக்கு தினசரி இலவசமாக அன்னதானம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில்  இயற்கை வேளாண்  பொருட்களை கொண்டு பக்தர்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்க  திட்டமிடப்பட்டது. அறங்காவலர் குழுவின் அனுமதி பெறாமல் இந்த திட்டம் தொடங்கப்படுவதால் இதனை  ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். புதிய அறங்காவலர் குழுவின் தலைவராக மீண்டும் நான்  தேர்வாகியுள்ளேன். ஆனால் இன்னும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவில்லை.  இதுபோன்ற நிலையில் தன்னிச்சையாக அதிகாரிகள் திட்டத்தை  அறிமுகப்படுத்தியுள்ளனர். எனவே ரத்து செய்கிறோம். காலம் காலமாக  வழங்கப்படும் இலவச உணவு முறை தொடரும். இவ்வாறு தெரிவித்தார்.

நடந்தது என்ன?
திருப்பதி தேவஸ்தானம் வழங்கிவரும் அன்னதான திட்டத்தை நிறுத்தவே முதற்கட்டமாக இயற்கை வேளாண் பொருட்களில் குறைந்த விலைக்கு உணவு திட்டத்தை தொடங்குகிறது என பலர் சமூக வலைதளங்களில் தகவல் பரப்பி வந்தனர். இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே, திட்டம் தொடங்கும் முன்பே ரத்து செய்வதாக தேவஸ்தானம் அறிவித்தது என்று கூறப்படுகிறது.

Tags : Tirupati Devasthanam , Tirupati Temple
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை...