×

தென் ஆப்ரிக்கா உட்பட பல நாடுகளில் பரவல்: தடுப்பூசி பாதுகாப்பையும் தகர்க்கும் வீரியமிக்க புதிய வகை கொரோனா: டெல்டாவை போல் தீவிரமாக தொற்றக்கூடியது

புதுடெல்லி: தடுப்பூசியால் பெற்ற நோய் எதிர்ப்பு சக்தியையும் தாண்டி, டெல்டா வகை வைரஸ் போல மிகத் தீவிரமாக பரவக் கூடிய சக்தி கொண்ட சி.1.2 வகை கொரோனா வைரஸ் தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பரவியிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்ட பிறகு புதிய வகை வீரியமிக்க கொரோனா வைரஸ் மாறுபாடுகள் உலகம் முழுவதும் பரவி வருகின்றன. இந்தியாவில் 2ம் அலைக்கு காரணமான டெல்டா வகை வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்துகிறது. தற்போது அந்த வரிசையில் அதிக வீரியமிக்க சி.1.2 வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. முதலில் கடந்த மே மாதம் இந்த வைரஸ் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. அந்நாட்டின் தொற்றுநோய்க்கான தேசிய நிறுவன ஆய்வாளர்கள் சி.1.2 மரபணு மாற்ற கொரோனா வைரஸை கண்டறிந்துள்ளனர்.

இந்த வைரஸ் குறித்த மதிப்பிடப்படாத ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. அதில் கூறப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவல்கள் வருமாறு: தென் ஆப்ரிக்காவில் முதல் அலை ஏற்பட காரணமான சி.1 வகை வைரசின் மோசமான பிறழ்வுதான் சி.1.2. வகை வைரஸ். இந்த வைரஸ் இதுவரை கண்டறியப்பட்ட மற்ற புதிய வகைகளைக் காட்டிலும் அதிக பிறழ்வுகளை ஏற்படுத்தக் கூடியது. இதன் ஸ்பைக் பகுதியில் மாறுபாடுகள் அதிவேக மாற்றத்தை கொண்டிருக்கின்றன. ஸ்பைக் புரதத்தை பயன்படுத்தியே வைரஸ்கள் மனித உடலுக்குள் ஊருடுவுகின்றன.

மேலும் பெரும்பாலான தடுப்பூசிகள் இந்தப் பகுதியை குறிவைக்கின்றன. அப்படியிருக்கையில், சில ஆன்டிபாடிகளிலிருந்து தப்பிக்கும் தொடர்புடைய N440K மற்றும் Y449H பிறழ்வுகள் சி.1.2 வகை வைரஸ்கள் காணப்படுகின்றன. இதன் மூலம் தடுப்பூசி போட்டவர்களையும் தாக்கும் வீரியம் கொண்டதாக சி.1.2 வகை இருக்க வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி, ஆல்பா அல்லது பீட்டா வகை வைரஸ் பாதிப்பால் ஏற்கனவே ஆன்டிபாடிகளை உருவாக்கிய நோயாளிகளையும் மீண்டும் தொற்றும் திறன் சி.1.2 வகை வைரஸ்களுக்கு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மூன்றாம் அலை தொடங்கியதா?
இந்தியாவில் கொரோனா 3ம் அலை தொடர்பாக ஐஐடி கான்பூர் ஆய்வாளர் மணிந்திரா அகர்வால் நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘இந்தியாவில் கொரோனா 3ம் அலை வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் உச்சமடையலாம். வீரியமிக்க புதிய வகை வைரஸ்கள் பரவாத வகையில், 3ம் அலையானது 2ம் அலை அளவுக்கு பயங்கரமானதாக இருக்காது. அதிகபட்ச தினசரி பாதிப்பு 1 லட்சமாக இருக்கலாம்’’ என கூறி உள்ளார். இதற்கிடையே, ஐசிஎம்ஆர் டாக்டர் சமிரன் பத்ரா அளித்த பேட்டியில், ‘‘3ம் அலை ஒரே நேரத்தில் நாடு முழுவதும் ஏற்படாது. இப்போதே 3ம் அலைக்கான அறிகுறிகள் சில மாநிலங்களில் தென்படுகின்றன. பண்டிகை காலங்களில் பொது இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவதால், நோய் பரவல் தீவிரமாகும் என்பதில் கவனமுடன் இருக்க வேண்டும்’’ என்றார்.

Tags : South Africa ,delta , Corona
× RELATED தென்னாப்பிரிக்காவில் பாலத்தை...