×

பீகாரில் பாஜ கூட்டணியில் விரிசலா?: நிதிஷ்குமார் பிரதமராவதில் எந்த சிக்கலும் ஏற்படாது: ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் கருத்தால் பரபரப்பு

பாட்னா: ‘‘பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பிரதமராக தேவையான எம்பிக்களின் ஆதரவை பெறுவதில் எந்தவொரு சிக்கலும் கிடையாது,’’ என்று ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜ கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஐக்கிய ஜனதா தள தலைவரும் முதல்வருமான நிதிஷ்குமார், ஒன்றிய பாஜ அரசுடன் ஒட்டாமலேயே இருந்து வருகிறது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்போவதில்லை என கொள்கை முடிவெடுத்துள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்த பிறகும், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென சமீபத்தில் நிதிஷ்குமார் தலைமையில் பீகார் மாநில கட்சிகள் பிரதமரை சந்தித்தன. பெகாசஸ் விவகாரத்தில் கண்டிப்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற நிதிஷ் கூறியதோடு, நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தவேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய கவுன்சில் கூட்டத்தில், பிரதமராவதற்கு தேவையான அனைத்து தகுதிகளும் நிதிஷ்குமாருக்கு இருக்கிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து அக்கட்சியின் முதன்மை பொது செயலாளரும் தேசிய செய்தி தொடர்பாளருமான கே.சி தியாகி கூறுகையில், ‘‘நிதிஷ் குமார் பிரதமர் பதவிக்கான போட்டியில் பங்கேற்காமல் போகலாம். ஆனால் அவருக்கு பிரதமருக்கு தேவையான அனைத்து குணங்களும் உள்ளது. எனவே எங்களது நோக்கங்களை தெளிவாக வைத்திருக்க இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது’’ என்றார்.  ஐக்கிய ஜனதா தளத்தின் மற்றொரு தலைவரான உபேந்திர குஷ்வாகா கூறுகையில், ‘‘மிக உயர்ந்த பிரதமர் பதவியை குறிவைக்கும் எண்ணம் ஐக்கிய ஜனதா தளத்துக்கு கிடையாது.

ஆனால், நிதிஷ் குமார் பிரதமர் பதவிக்கு தேர்வாகும் பொருட்டு, அதற்கு தேவையான 272 எம்பி.க்களின் ஆதரவை திரட்டுவதில் எந்த பிரச்னையும் இருக்காது. பிரதமர் மோடி தலைமையை ஏற்றுக் கொண்டு, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம். தற்போது வரை, அவர்களிடம் பிரதமர் பதவியை கேட்கவில்லை. ஆனால், யூகத்தின் அடிப்படையில் மக்கள் எதிர்காலம் குறித்து இப்படி கேட்டால், பின்னர் எதையும் சாத்தியமற்றது என்று நிராகரிக்க முடியாது,’’ என்று கூறினார். இதனால் பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜ கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Tags : BJP ,Bihar ,Nitish Kumar ,United Janata ,Dal , Bihar, BJP alliance
× RELATED பீகாரில் இந்தியா கூட்டணி தொகுதி...