×

காபூல் விமான நிலையத்திற்கு மேற்கே பயங்கரம்: ஐஎஸ்-கே தாக்குதலில் 2 குழந்தைகள் உட்பட 9 பேர் பலி

காபூல்: காபூல் விமான நிலையத்தின் மேற்கே ஐஎஸ்-கே தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியாகினர். ஐக்கிய அரசு எமிரேட்ஸில் இருந்து அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில், தீவிரவாதிகளின் கார் வெடித்து சிதறியது. ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில், இதுவரை 1,12,000 பேரை அமெரிக்கா பத்திரமாக மீட்டுள்ளது. பல நாடுகளும் தங்களது பிரஜைகளை பத்திரமாக மீட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை காபூல் விமானநிலையத்துக்கு வெளியே நடந்த ஐஎஸ்ஐஎஸ் - கே அமைப்பின் தீவிரவாத தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 13 பேர் உள்ளிட்ட 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

ஆப்கனில் இன்னும் நிலைமை அபாயகரமானதாக உள்ளதாகவும், காபூல் விமான  நிலையத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்கா  தெரிவித்தது. இதற்கிடையே, அமெரிக்க மற்றும் மேற்கத்திய படைகள் நாளைக்குள்  (ஆக. 31) நாட்டைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்று தலிபான்கள்  எச்சரித்துள்ளனர். இதற்கிடையே, இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் ஆப்கானிஸ்தான்  பிரிவான ஐஎஸ்ஐஎஸ் - கே (இஸ்லாமிக் ஸ்டேட் - கோரேசன்) அமைப்பின் உறுப்பினர்களை  இலக்கு வைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா அதிகாரிகள்  தெரிவித்தனர்.

நங்கஹார் மாகாணத்தில் நடத்திய ட்ரோன் தாக்குதலில், ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் முக்கிய புள்ளி கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் நேற்று முன்தினம் கூறியது. தொடர்ந்து நேற்று, ஐஎஸ்ஐஎஸ் - கே அமைப்பின் டாப் கமாண்டர்கள் எனப்படும் பெரும் புள்ளிகள் காரில் சென்ற போது, அந்த காரின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும். 1,000 மைல்களுக்கு அப்பால் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள தளத்திலிருந்து ட்ரோன் இயக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர். இந்த தாக்குதலில் முக்கிய தலைவர்கள் பலியானதாகவும், இலக்கு வைத்து தாக்கப்பட்ட வாகனத்தில் கணிசமான அளவு வெடிபொருட்கள் இருந்ததை அதிகாரிகள் உறுதிபடுத்தி உள்ளனர்.

இந்தத் தாக்குதலால் காபூல் விமான நிலையத்துக்கு இருந்த தவிர்க்க முடியாத அச்சுறுத்தல் ஒழிக்கப்பட்டதாக அமெரிக்காவின் சென்ட்ரல் காமாண்டின் கேப்டன் பில் அர்பன் கூறியுள்ளார். ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 2 குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் கூறியுள்ளது. ஆனால், அமெரிக்க ராணுவம் பலியானவர்கள் குறித்து விசாரித்து வருவதாக கூறியுள்ளது. இதுகுறித்து, தலிபானின் தலைமை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘விமான நிலையத்திற்கு மேற்கே உள்ள பகுதியில் வீடு மற்றும் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் பலியானவர்களில் மாணவ பத்திரிகையாளர் சமீம் ஷஹ்யாத் (25), அவரது தந்தை, அவரது இரண்டு சகோதரர்கள், அவரது இளம் உறவினர்கள் நான்கு பேர், அவரது மருமகள், அவரது  உறவினர் ஆகியோர் பலியாகினர். இறந்தவர்களில் மூன்று பேர் 2 வயது அல்லது அதற்கு குறைவான வயதுடைய சிறுமிகள் ஆவர். எங்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளனர்’ என்றார். இதுதொடர்பாக வெளியிட்ட வீடியோவில், குண்டு வைத்து தகர்க்கப்பட்ட வாகனம், சில அடி தூரத்தில் மற்றொரு வாகனம் எரிந்த நிலையில் காணப்பட்டது.

நாளையுடன் அமெரிக்க படைகள் ஆப்கானில் இருந்து வெளியேற காலஅவகாசம் முடிந்துள்ள நிலையில், பெரும்பாலான நாடுகளின் மக்கள் அழைத்து செல்லப்பட்டனர். அமெரிக்க படைகளை சேர்ந்த 4,500 பேர் இன்னும் ஆப்கானில் உள்ளனர். அதனால், அவர்கள் இன்றும், நாளைக்குள் அமெரிக்காவுக்கு பத்திரமாக அழைத்து செல்லப்படுவார்கள். அதன்பின், ஆப்கானில் தலிபான்கள் தங்களது ஆட்சியை அமைப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீரர்களுக்கு அதிபர் மரியாதை
*  அமெரிக்க அதிபர் ஜோ பிடன், நேற்று தனது சொந்த மாநிலமான டெலாவேருக்கு சென்றார். அவருடன் அவரது மனைவி ஜில் பிடனும் சென்றார். அவர்கள், ஆப்கானில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 13 வீரர்களின் குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர். ஆப்கானில் இருந்து அமெரிக்க கொடிகள் போர்த்தப்பட்ட 13 வீரர்களின்  சவப் பெட்டிகளுக்கு அதிபர் ஜோ பிடன் மரியாதை செலுத்தினார்.
* கிட்டத்தட்ட கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கானில் தீவிரவாதிகளுக்கு எதிராக நடந்த போரில், 2,400க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள், நட்பு நாடுகளைச் சேர்ந்த 1,100க்கும் மேற்பட்ட வீரர்கள், 3,800க்கும் மேற்பட்ட அமெரிக்க ஒப்பந்தக்காரர்கள், 500க்கும் மேற்பட்ட உதவி தொழிலாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள், 47,000க்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் மக்கள் ஆகியோர் பலியாகி உள்ளனர். பிரவுன் பல்கலைக்கழகத்தின் போர் செலவுகள் திட்ட கணக்கெடுக்கின்படி 69,000 ஆப்கானிஸ்தான் வீரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் சுமார் 51,000 தலிபான் தீவிரவாதிகள் இந்த போரில் இறந்ததாக கூறப்பட்டுள்ளது.

தலிபானால் இந்தியாவுக்கு ஆபத்து?
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையிலான அரசு அமைக்கப்படவுள்ள நிலையில், தலிபான் தலைவர் ஷேர் முகமது ஸ்தானக்சாய் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘இந்தியாவுடன் சிறந்த உறவை பேண நாங்கள் விரும்புகிறோம். இந்தியா மட்டுமின்றி அனைத்து அண்டை நாடுகளுடனும் நல்ல உறவை மேற்கொள்வோம். தலிபான்களால் பாகிஸ்தானுக்கு நல்லது என்றும், இந்தியாவுக்கு அது ஆபத்தானது என்று ஊடகங்களில் வரும் செய்திகள் பொய்யானவை. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானுடன் கைகோர்ப்போம் என்பது பொய். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நீண்ட காலமாக அரசியல் மற்றும் எல்லைகள் ரீதியாக சர்ச்சைகள் உள்ளன.

அதில் நாங்கள் தலையிட மாட்டோம். எங்கள் நிலத்தை அதற்காக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். உலகின் எந்த நாட்டிற்கு எதிராகவும், ஆப்கானிஸ்தான் மண்ணை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். இந்தியா ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் அணை, சாலை, கட்டுமானம் போன்ற வளர்ச்சிப் பணிகளைச் செய்துள்ளது. இவை அழிக்கப்படும் என்ற செய்தியை மறுக்கிறேன். ஆப்கானிஸ்தானில் இந்தியா செய்த வளர்ச்சிப் பணிகள் யாவும், எங்களது தேசிய சொத்து’ என்றார்.


Tags : Kabul airport , Terror west of Kabul airport: IS-K attack kills 9, including 2 children
× RELATED காபூலை விட்டு நீங்கிய வெளிநாட்டு...