நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று கிருஷ்ணஜெயந்தி விழா கோலாகல கொண்டாட்டம்: கோயில், வீடுகளில் சிறப்பு வழிபாடு

நெல்லை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று கிருஷ்ண ஜெயந்திவிழா கொண்டாடப்பட்டது. கோயில் மற்றும் வீடுகளில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஆண்டுதோறும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திர நாளில் கிருஷ்ண பகவான் அவதரித்த நாளை கோகுலாஷ்டமி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கிருஷ்ண ஜெயந்திவிழா இன்று கோயில்களிலும், இல்லங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணபகவான் இல்லத்திற்கு வந்து அருள்பாலிப்பது கோகுலாஷ்டமியின் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.

இதனை வெளிப்படுத்தும் வகையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வீடுகளை சுத்தம் செய்து அரசிமாவு கோலம் மற்றும் வாயிலில் இருந்து பூஜை அறை வரை அரசிமாவினால் பாலர் கிருஷ்ணனின் பிஞ்சுபாதங்களை வரைந்து கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணை, அவல், தயிர், சீடை முறுக்கு, தட்டை போன்ற உணவுப்பொருட்கள், பழங்களை வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தினர். வீட்டில் உள்ள குழந்தைகள், சிறுவர் சிறுமியருக்கு கிருஷ்ணர், ராதை வேடமணிந்து மகிழ்ந்தனர். கோயில்களிலும் இன்று சிறப்பு வழிபாடு நடந்தன. நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோயிலில் காலை முதல் சிறப்பு ஹோமபூஜைகள் நடந்தன.

மாலையில் உரியடி வைபவம் மற்றும் கோபூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து அழகிய கிருஷ்ணரின் ஓவியங்கள் வரையப்பட்ட மண்பாணைகளில் பூஜை பலகாரப்பொருட்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. நெல்லை வண்ணார்பேட்டை இஸ்கான் கோயில் மற்றும் அனைத்து பெருமாள் கோயில்களிலும் கிருஷ்ண ஜெயந்திவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

Related Stories: