×

காலநிலை மாற்றத்தால் மதுரைக்கு அதிகம் பாதிப்பு; உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வருக்கு வெங்கடேசன் எம்.பி கடிதம்

சென்னை: காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டமாக மதுரை இருக்கிறது என்று இந்திய வானிலைத்துறையின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஒன்றிய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய வானிலை துறையின் ஆய்வு அறிக்கையின் படி, தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களிலேயே காலநிலை மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்பட போகிற மாவட்டமாக மதுரை இருப்பது தெரியவருகிறது.

மதுரை மாவட்டத்தின் வருடாந்திர சராசரி மழை பொழிவு கடுமையாக குறைய ஆரம்பித்துள்ளது என்றும், தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் மதுரை மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் பெய்கின்ற மழையின் அளவு குறைந்து வருகிறது என்றும் இவ்வறிக்கை கூறுகிறது. இதில் வருட சராசரி மழை பொழிவு குறிப்பிடத்தக்க அளவு குறைகின்ற தமிழகத்தின் ஒரே மாவட்டம் மதுரையே என்கிறது இந்த ஆய்வு. ஒவ்வொரு மாதமும் பெய்கின்ற மழையின் அளவை கணக்கில் கொண்டு, எல்லா மாதமும் சராசரி மழை பொழிவு குறைந்து வரக்கூடிய மாவட்டமாக மதுரையை சொல்கிறது புவி அறிவியல் துறையின் ஆய்வு.

அதுமட்டுமல்லாமல் வறண்ட நாட்களின் எண்ணிக்கையும் மதுரை மாவட்டத்தில் அதிகரிக்கிறது என்றும் தெரிவிக்கிறது. எனவே, ‘மதுரை மாவட்டத்தின் பசுமை போர்வையை 33% ஆக அதிகரிக்க சிறப்பு திட்டங்கள் அறிவிக்கவேண்டும். ஏற்கனவே உள்ள காடுகளை வேறு எந்த பயன்பாட்டிற்கும் மாற்றம் செய்யக்கூடாது என்று உத்தரவிட வேண்டும், அக்காடுகளை பாதுகாக்க சிறப்பு திட்டங்களை அறிவிக்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் உள்ள எல்லா நீர்நிலைகளையும் போர்க்கால அடிப்படையில் மீட்டுருவாக்கம் செய்து அவற்றை முழுக் கொள்ளளவிற்கு தூர்வார வேண்டும்.

வைகையின் பிறப்பிடமான மேற்குமலைகளை பாதுகாக்க தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும். வைகை நதியை ஐந்து மாவட்ட நிர்வாக கட்டுப்பாட்டு பகுதியாக இல்லாமல் ஒற்றை நிர்வாக அலகின் கீழ் கொண்டுவர வேண்டும். மதுரை மாவட்டம் தமிழகத்தின் கலாச்சார தலைநகரம், அதன் சூழலை மீட்டுருவாக்கம் செய்வதற்கும், காற்று மாசை குறைப்பதற்கும் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்’ எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Madurai ,Venkatesh , Madurai is most affected by climate change; Take appropriate action: Venkatesh MP's letter to the Prime Minister
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...