×

சென்னை ஓஎம்ஆரில் உள்ள 4 சுங்கச் சாவடிகளில் கட்டண வசூல் நிறுத்தம்: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

சென்னை: சென்னை ஓஎம்ஆரில் உள்ள 4 சுங்கச் சாவடிகளில், சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டபடி, இன்று காலை முதல் கட்டணம் வசூல் செய்வது நிறுத்தப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியுடன் சுங்கச் சாவடிகளை கட்டணமில்லாமல் கடந்து சென்றனர்.  சென்னை பழைய மாமல்லபுரம் சாலை, 2009ம் ஆண்டு ரூ.300 கோடி செலவில், ஆறு வழி சாலையாக தரம் உயர்த்தப்பட்டு, ராஜிவ் காந்தி சாலை என பெயர் மாற்றப்பட்டது. இச்சாலையில், சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகனங்களுக்கு ஏற்றவாறு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.  

 இந்த சுங்கச் சாவடிகளில் 2009ம் ஆண்டு முதல் இதுவரை 7 முறைக்கு மேல், கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிக்குள் உள்ள சுங்கச்சாவடிகளால் பொருளாதார பாதிப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அவற்றை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இவற்றை அகற்றக் கோரி கடந்தாண்டு எதிர்க்கட்சியாக இருந்த திமுக போராட்டம் நடத்தியது.  மேலும், சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது ராஜிவ் காந்தி சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார்.  பல வாக்குறுதிகள் வரிசையாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் சுங்க சாவடி கட்டணம் நிறுத்துவது தொடர்பான அறிவிப்பு எப்போது வரும் என்று மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்தனர்.

 இந்நிலையில், கடந்த 13ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு பல திட்டங்களுக்கான அறிவிப்புகளும் வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், தமிழக சட்டப் பேரவையில் நெடுஞ்சாலைகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தை தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.  அப்போது, சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் நிறுத்தம் செய்வது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். ‘‘சென்னை மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்படுவதையொட்டி, ராஜிவ் காந்தி சாலையில் உள்ள பெருங்குடி, துரைப்பாக்கம், கலைஞர் சாலை மற்றும் மேடவாக்கம் சாலைகளில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவது நிறுத்தப்படுகிறது’’ என்று கூறினார்.  

 இதற்கான ஆணையும் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அரசின் உத்தரவுபடி இன்று காலை முதல் இந்த 4 சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூல் செய்வது நிறுத்தப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டணமில்லாமல் இவற்றை கடந்து சென்றனர். இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags : Chennai , Chennai, OMR, 4 Customs, toll collection, parking
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...