4வது டெஸ்ட் போட்டிக்கான 15பேர் கொண்ட அணி அறிவிப்பு; கிறிஸ் வோக்ஸ் அணிக்கு திரும்புவது மகிழ்ச்சி தருகிறது: இங்கிலாந்து பயிற்சியாளர் சில்வர்வுட் பேட்டி

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி டிரா ஆன நிலையில் லார்ட்சில் நடந்த 2வது டெஸ்ட்டில் இந்தியாவும், லீட்சில் நடந்த 3வது டெஸ்ட்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. 1-1 என தொடர் சமனில் உள்ள நிலையில், 4வது டெஸ்ட் வரும் வியாழக்கிழமை ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இதற்காக இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோஸ் பட்லர் மனைவிக்கு 2வது குழந்தை பிறக்க உள்ளதால் அவர் 4வது டெஸ்ட்டில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்  சாம்பில்லிங்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் 4வது டெஸ்ட்டில் பேர்ஸ்டோ விக்கெட் கீப்பராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆல்ரவுண்டர் கிறிஸ்வோக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஓய்வில் இருந்தார். ஒரு ஆண்டுக்கு பின் அணியில் இடம் பிடித்துள்ளார். 3வது டெஸ்ட்டில் இடம்பெற்றிருந்த சாகிப் மஸ்முத் , கவுன்டி போட்டியில் லங்காஷயருர் அணிக்காக ஆட இருப்பதால் இங்கிலாந்து அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.  காயத்தில் இருந்து மார்க் வுட் குணமாகி இருப்பதால் ஓவலில் ஆட தயாராக உள்ளார்.

இதுபற்றி இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் கூறியதாவது: ஹெடிங்லியில் வெற்றி பெற்ற பிறகு, ஓவலில் நடக்கும் அடுத்த டெஸ்டில் வலுவான இந்திய அணிக்கு எதிராக சிறப்பான அணி கிடைத்துள்ளது. கிறிஸ் வோக்ஸ் டெஸ்ட் அணிக்குத் திரும்புவது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. காயத்தில் இருந்து குணமான அவர் கவுன்டி போட்டியில் கடந்த வாரம் சிறப்பாக பந்துவீசினார். அவரின் பந்துவீச்சு, பேட்டிங் திறமையை நாங்கள் இதுவரை இழந்துவிட்டோம். அவர் அணியின் சொத்து. அவரின் வருகையால் பேட்டிங்கில் மிடில் ஆர்டர் வலுப்பெறும்.

தொடரின் கடைசி கட்டங்களை நெருங்கும்போது, ​​எங்கள் பந்துவீச்சுப் பங்குகளுடன் பல விருப்பங்கள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, ஜோஸ் பட்லர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அவர்களின் இரண்டாவது குழந்தை விரைவில் பிறக்க வாழ்த்துக்கள். கடைசி டெஸ்ட்டில் பட்லர் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கிறோம், என்றார். 15 பேர் கொண்ட இங்கிலாந்துஅணி: ஜோ ரூட் (கேப்டன்), மொயின் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோன்னி பெர்ஸ்டோ, (விக்கெட் கீப்பர்), சாம் பில்லிங்ஸ், ரோரி பர்ன்ஸ், சாம் கரன், ஹசீப் ஹமீத், டான் லாரன்ஸ், டேவிட் மலான், கிரெக் ஒவர்டன், ஒல்லி போப், ஒல்லி ராபின்சன், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

Related Stories:

More
>