ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான யுஎஸ் ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்: புதிய வரலாறு படைப்பாரா ஜோகோவிச்?

நியூயார்க்: ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என்று 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தொடர்கள் நடத்தப்படுகிறது. இதில் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான யுஎஸ் ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் இன்று தொடங்குகிறது. வரும் 12ம் தேதி வரை போட்டிகள் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்த ஆண்டில் ஏற்கனவே 3 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்(34) மீது பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. இவர் இந்த முறை யுஎஸ் ஓபன் பட்டம் வென்றால் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர் என்ற புதிய சாதனையை நிகழ்த்துவார்.

சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஸ்பெயினின் ரபெல் நடால், ஜோகோவிச் ஆகியோர் தலா 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளனர். காயம் காரணமாக இந்த முறை பெடரர் மற்றும் ரபேல் நடால் யுஎஸ் ஓபனில் விளையாடாத நிலையில், ஜோகோவிச் பட்டம் வென்றால் அதிக கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற புதிய வரலாறு படைக்கலாம். மேலும் 1969ம் ஆண்டுக்கு பிறகு எந்த ஒரு வீரரும் ஒரே ஆண்டில் 4 கிராண்ட்ஸ்லாமும் வென்றதில்லை. அந்த சாதனையையும் நிகழ்த்தலாம். ஜோகோவிச் அமெரிக்க ஓபன் பட்டத்தை 3 முறை (2011, 2015, 2018) வென்றுள்ளார். தற்போது 4வது முறையாக பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளார்.

முதல் சுற்றில் அவர் தகுதி நிலை வீரர் டென்மார்க்கின் ஹோல்ஜர் நோட்ஸ்கோ ருனேவை வரும் 1ம் தேதி எதிர்கொள்கிறார். இவரை தவிர 2ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மெட்வதேவ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் , கிரீஸ் வீரர் சிட்சி பாஸ், ஸ்பெயினின் பாடிஸ்டா அகுட் ஆகியோரும் சாம்பியன் போட்டியில் உள்ளனர். நடப்பு சாம்பியன் ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் காயம் காரணமாக இந்த முறை பங்கேற்க வில்லை. மகளிர் ஒற்றையர் பிரிவில் 23 கிராண்ட்ஸ்லாம் வென்றவரான அமெரிக்காவின் 39 வயது செரீனா வில்லியம்ஸ், அவரின் அக்கா வீனஸ் வில்லியம்ஸ், 5ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் சோபியா கெனின் ஆகியோர் காயம் காரணமாக விலகி உள்ளனர்.

இருப்பினும்  நம்பர் 1 வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி, நடப்பு சாம்பியனான ஜப்பானின் நவோமி ஒசாகா, பெலாரசின் அரினா சபலென்கா, ருமேனியாவின் சிமோனா ஹாலெப், சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக், போலந்தின் ஸ்வியாடெக், கனடாவின் பியான்கா ஆன்ட்ரீஸ்கு, செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா ஆகியோர் சாம்பியன் ரேசில் உள்ளனர். இந்திய நேரப்படி இன்று இரவு 8.30 மணிக்கு போட்டிகள் தொடங்கி நடக்கிறது.

 முதல்நாளான இன்று மகளிர் பிரிவில் முதல் சுற்றில் ஹாலெப், அமெரிக்காவின் மேடிசன் கீஸ்-ஸ்லோன் ஸ்டீபன், ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர்,  உக்ரைனின் எலினா ஸ்விடோலினா,

அமெரிக்காவின் கோகா காப் உள்ளிட்டோர் களம் காண்கின்றனர். ஆடவர் இரட்டையரில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, குரோஷியான் இவான் டோடிக்குடன் இணைந்து களம் இறங்குகிறார். மகளிர் இரட்டையரில் இந்தியாவின் சானியா மிர்ஸா, அமெரிக்காவின் கோகோவந்தேவெகேவுடன் இணைந்து விளையாடுகிறார்.

பட்டம் வென்றால்₹18.5கோடி பரிசு

யுஎஸ் ஓபன் போட்டி தொடரில் மொத்த பரிசுத்தொகை ₹422 கோடி. ஆடவர், மகளிர் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வோருக்கு ₹18.50 கோடியும், 2வது இடம் பிடிப்போருக்கு ₹9.25 கோடியும் கோப்பையுடன் பரிசுத்தொகையாககிடைக்கும். அரையிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறினால் ₹4.95 கோடியும், கால்இறுதியில் தோல்வி அடைந்தால் ₹3.12 கோடி, இரட்டையர் பிரிவில் வெல்லும் ஜோடிக்கு ₹4.75கோடி கிடைக்கும். 

Related Stories: