பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற வீரர்களுக்கு ஜி.கே.வாசன் பாராட்டு

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: டோக்கியோ பாரா ஒலிம்பிக் தொடரில் மகளிர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனை அவனி லெகாரா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருப்பது வரலாற்று சிறப்பு மிக்கது. குறிப்பாக அவனி லெகாரா 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 249.6 புள்ளிகள் பெற்று உலக சாதனையை சமன் செய்ததன் மூலம் இந்தியாவை உலகமே உற்று நோக்குகிறது.

தனது கடுமையான பயிற்சியின் மூலம், திறமையாக விளையாடி தங்கப் பதக்கம் வென்றிருப்பதால் இந்திய விளையாட்டு வீரர்கள் உற்சாகமும், ஊக்கமும் அடைகிறார்கள்.

இன்றைய போட்டியில் வட்டு எறிதலில் இந்தியாவின் யோகேஷ் கத்துனியா 44.38 மீட்டர் தூரத்திற்கு வட்டெறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றிருப்பதும் பாராட்டுக்குரியது. மேலும் ஈட்டி எறிதலில் தேவேந்திர ஜஜாரியா வெள்ளிப்பதக்கமும், சுந்தர் சிங் குர்ஜார் வெண்கலப்பதக்கமும் வென்றிருப்பது விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களுக்கு உந்துதலாக உள்ளது. நேற்று 2 வெள்ளி, 1 வெண்கலம் என்று பதக்கப்பட்டியலில் இடம் பெற்றிருந்த இந்தியா இன்று ஒரு தங்கப் பதக்கம், இரண்டு வெள்ளிப்பதக்கம், ஒரு வெண்கலப்பதக்கம் வென்று இதுவரை 7 பதக்கங்களுடன் முன்னேறிக்கொண்டிருப்பதன் மூலம் இந்திய விளையாட்டு வீரர்களின் புகழ் உலக அளவில் மென்மேலும் பரவுகிறது.

 இந்திய நாட்டுக்கு பதக்கப் பட்டியலில் தனது பங்களிப்பை மிகச் சிறப்பாக மேற்கொண்டு தங்கப்பதக்கம் வென்றிருக்கும் வீரர், வீராங்கனைகளை தமாகா சார்பில் வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

More