×

மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டு சென்றார் விஜயகாந்த்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக இன்று காலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதை அடுத்து அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அதே நேரத்தில் மேல்சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கும் சென்று வந்தார். கடந்த 2019ம் ஆண்டு  மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். தொடர்ந்து அவ்வப்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து வந்தார். சமீபத்தில் விஜயகாந்த்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்கு பிறகு அவர் அதில் இருந்து மீண்டு வந்தார்.

கொரோனா காரணமாக உடல் பரிசோதனை செய்ய அமெரிக்கா செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 25ம் தேதி தனது பிறந்தநாளை விஜயகாந்த் கொண்டாடினார். அப்போது தன்னை சந்திக்க வர வேண்டாம். ஏழை எளிய  மக்களுக்கு உதவி செய்யுங்கள் என்று தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும் விரைவில் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல உள்ளதாகவும் தெரிவித்து இருந்தார்.  இந்நிலையில்  தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவப் பரிசோதனைக்காக இன்று காலை 10.30  மணியளவில் சென்னை விமானநிலையத்தில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்றார். துபாய் வழியாக அவர் அமெரிக்கா சென்றார். அவருடன் அவரது இளைய மகன் சண்முக பாண்டியன், அவரது உதவியாளர்கள் குமார், சோமு சென்றனர். அமெரிக்கா செல்லும் விஜயகாந்த் சுமார் ஒரு மாதம் காலம் அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Tags : Vijayakant ,United States , Medical Treatment, USA, Vijaykanth
× RELATED தாய் கண் முன்னே இளைஞர் வெட்டிக்கொலை