தெற்குராஜன் வாய்க்காலில் தண்ணீர் திறந்ததால் கொள்ளிடம் பகுதியில் தூர்வாரும் பணி தீவிரம்

கொள்ளிடம்: தெற்கு ராஜன் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், கொள்ளிடம் பகுதியில் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தெற்குராஜன் வாய்க்கால் கொள்ளிடம் ஆற்றின் வலது கரையிலிருந்து அணைக்கரையில் பிரிகிறது. மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் தஞ்சை மாவட்டங்களில் மணல்மேடு, சித்தமல்லி, பனங்காட்டான்குடி, வடரங்கம், சரஸ்வதிவிளாகம், கொள்ளிடம், ஆச்சாள்புரம், முதலைமேடு, மகேந்திரப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 22122 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி தருகிறது. இதன் மொத்த நீளம் 53.580 கிமீ. இதன் கொள்ளளவு 693 கனஅடி. இந்த தெற்குராஜன் ஆற்றில் ஒரு தலைப்பு மதகு, 8 கதவணைகள், ஒரு கடைமடை கதவணை ஆகியவை உள்ளது. இதிலிருந்து 54 ‘அ’ பிரிவு பாசன வாய்க்கால்களும் அமைந்துள்ளன.

தமிழக பாசனம் மற்றும் மேலாண்மை நவீனப்படுத்தும் திட்டம் பகுதி 2ன் கீழ் 56.45 கோடிகளில் பணிகள் நடைபெற்று தற்போது முடியும் தருவாயில் உள்ளது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 39.70 கோடிகளில் பணிகள் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது. குறுவை சாகுபடி காலம் முடிவுற்று வரும் நிலையில், சம்பா சாகுபடி காலம் துவங்கப்பட உள்ளதால் அணைக்கரை கீழணையிலிருந்து நேற்று மாலை தண்ணீர் பாசனத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தெற்கு ராஜன் வாய்க்கால் கடைமடை பகுதியான கொள்ளிடம் அருகே உள்ள மகேந்திரப்பள்ளி கிராமத்தில் தூர்வாரும் பணி நேற்று தீவிரமாக நடைபெற்றது. நேற்று அணைக்கரையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இன்னும் 2 அல்லது 3 தினங்களில் கொள்ளிடம் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேரும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

More
>