×

சேலத்தில் இருந்து காரைக்குடிக்கு 2 கார்களில் கத்தை கத்தையாக கொண்டு வந்த ரூ.5 கோடி சிக்கியது: 6 பேரை பிடித்து விசாரணை

காரைக்குடி: சேலத்திலிருந்து காரைக்குடிக்கு 2 கார்களில் கத்தை கத்தையாக கொண்டு வரப்பட்ட 5 கோடி ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 6 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சியிலிருந்து, சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு 2 கார்களில் பல கோடி ரூபாய் பணம் கொண்டு வரப்படுவதாக குற்றப்பிரிவு தனிப்படை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார், காரைக்குடி என்ஜிஓ காலனி நான்கு வழிச்சாலையில் வந்த 2 கார்களை நிறுத்தி விசாரணை நடத்தினர். காரில் இருந்தவர்கள், சேலத்தில் இருந்து திருச்சி வழியாக காரைக்குடியில் நிலம் வாங்க வந்ததாக கூறினர். அதற்காக 5 கோடி ரூபாய்க்கு மேல் கொண்டு வந்ததாக தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த 2 கார்களையும் சந்தேகத்தின் அடிப்படையில் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து, காரைக்குடி வடக்கு காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். கார்களில் வந்த சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த ராஜ்குமார் (43), திருச்சியை சேர்ந்த காமராஜ் (40), கோவையைச் சேர்ந்த சண்முக ஆனந்த் (46), குமார் (46), சென்னையைச் சேர்ந்த சூர்யா கிஷோர் (51), சேலத்தை சேர்ந்த மணிகண்டன் (48) ஆகிய 6 பேரிடம் டிஎஸ்பி வினோஜி, வருமானவரித்துறை அதிகாரி மகேஸ்வரி மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கார்களில் இருந்த கட்டைப்பைகளில் கத்தை, கத்தையாக இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் ₹5 கோடிக்கு மேலிருக்கும் என போலீசார் தெரிவித்தனர். மதுரை வருமானவரித்துறை துணை இயக்குநர் ஸ்டாலின் தலைமையில் வந்த 5 அதிகாரிகள், கார்களில் பணம் கொண்டு வந்தவர்களிடம் நேற்றிரவு விசாரணை நடத்தினர். அத்துடன் எவ்வளவு பணம் உள்ளது என்று எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

Tags : Salem ,Karaikudi , In Salem, 2 cars, one by one, got stuck
× RELATED இறைச்சி கடைகள் செயல்பட தடை