குன்னூரில் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு ஆப்கனில் மாறி வரும் சூழல் இந்தியாவுக்கு சவால்

குன்னூர்: ஆப்கானிஸ்தானில் மாறிவரும் சூழல்  இந்தியாவுக்கு சவாலாக உள்ளது என ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் வெளிநாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பேசியதாவது: இந்திய எல்லைகளில் சவால்கள் இருந்தாலும், நாட்டின் தேசிய பாதுகாப்பில் எந்த ஒரு சமரசமும் இருக்காது என நாட்டு மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். நமது அண்டை நாடுகளில் ஒன்றான பாகிஸ்தான் மறைமுக போரை நாட தொடங்கியுள்ளது.

பயங்கரவாதம் என்பது பாகிஸ்தானின் ஒரு அங்கமாகிவிட்டது. பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள், நிதி மற்றும் பயிற்சி அளிப்பதன் மூலம் இந்தியாவை குறிவைக்க துவங்கியது.

தற்போது, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்திற்கு எங்கள் பலம் தான் காரணம். இந்தியா-சீனா எல்லை மோதலின்போது சீன படைகள் முன்னேற முயன்றன. அப்போது, நான் இரவு 11 மணியளவில் ராணுவ தளபதியிடம் பேசினேன். நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. அந்த சூழ்நிலையிலும், இந்திய படைகள் விவேகமாக நடந்து கொண்ட விதம் பாராட்டுக்குரியது. இதன்மூலம், எங்கள் தேசியப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் எந்த எதிரியையும் எதிர்கொள்ளவும் தாங்கள் தயார் என்பதை பாதுகாப்புப் படையினர் மீண்டும் நிரூபித்தனர். ஆப்கானிஸ்தானில் மாறிவரும் சூழல் இந்தியாவுக்கு ஒரு சவாலாக உள்ளது. இந்த சூழ்நிலை, நம் நாட்டின் யுக்தியை மறுபரிசீலனை செய்ய கட்டாயப்படுத்தியுள்ளது. ஒருங்கிணைந்த போர் குழுக்களை உருவாக்குவதை பாதுகாப்பு அமைச்சகம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>