×

நவீன தொழில்நுட்பத்துடன் நிலஅளவை மேற்கொண்டு நிலங்களின் எல்லைகள் நிர்ணயித்து வரைபடம் தயாரிக்க வேண்டும்: அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவு

சென்னை: கோயில்களுக்கு சொந்தமான அசையாச் சொத்துக்களை, நவீன தொழில்நுட்பத்துடன் நிலஅளவை மேற்கொள்ள வேண்டும் என்று அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி, அனைத்து கோயில்களிலும் கண்டறியும் குழு மற்றும் பரிசீலனைக்குழு அமைக்கப்பட்டு நிலங்கள் அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஜிஐஎஸ் மேப்பிங் பணியினை மேற்கொள்ள அரசு நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் வழங்கிய கருத்துரை அடிப்படையில், அங்கீகரிக்கப்பட்ட நில அளவையர்களை கொண்டு அனைத்து நில அளவைப் பணிகளும் மேற்கொள்ளலாம்.எனவே, நில அளவீடு பணியை விரைவில் முடிக்க ஏதுவாக அங்கீகரிக்கப்பட்ட நில அளவையர்கள் மண்டலம் தோறும் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். எனவே, பணிகள் மேற்கொள்வது பற்றி விவரத்துடன் கூடிய செயல்முறை உத்தரவு மண்டல இணை ஆணையரால் பிறப்பிக்கப்பட்டு நகல் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.

மேலும், கோயில் நில ஆவணங்களை நில அளவையர்களுக்கு அளிக்க தயார் நிலையில் அதிகாரிகள் வைத்திருக்க வேண்டும். ஒரு குழுவிற்கு மூன்று புல உதவியாளர்களை தினக்கூலி அடிப்படையில் பணியில் ஈடுபடுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. நிதி வசதி இல்லாத கோயில் நிலம் தொடர்பான இப்பணிக்கு நிதிவசதி மிக்க கோயில் மூலம் ஊதியம் வழங்கிட இணை ஆணையர்களே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட நில அளவையர்களை தங்களது மண்டலத்தில் ஒரே இடத்தில் அதிக பரப்பளவு அமைந்துள்ள கோயில் நிலங்களில் இப்பணியினை குரூப்பிங் செய்து முதலில் துவக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட நில அளவையர்கள் கோயில் நிலங்களின் எல்லைகளை நிர்ணயம் செய்து எல்லைக்கற்களை நட்டு வரைபடம் தயார் செய்ய வேண்டும். மேலும், முடிக்கப்பட்ட நில அளவை பணிகள் தொடர்பான விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Commissioner ,Charities Kumaraguruparan , With modern technology, survey, map, treasury
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...