கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பெண்களுடைய முன்னேற்றம்தான் நாட்டின் முன்னேற்றம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ஒரு நாட்டில், பெண்களுடைய முன்னேற்றம்தான் அந்த நாட்டினுடைய முன்னேற்றமாக இருக்கும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், பேசினார். தமிழக முதல்வரும் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலின் நேற்று கொளத்தூர் தொகுதியில் பல்வேறு திட்ட பணிகளை துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முதலாவதாக சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட ஜி.கே.எம் காலனி 30வது தெருவில், தமிழ்நாட்டில் கூடுதல் மின் பளு மற்றும் குறைந்த மின் அழுத்தத்தை தவிர்க்க 625 கோடி மதிப்பில் 8 ஆயிரத்து 905 புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து, கொளத்தூர் எவர்வின் பள்ளியில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயிற்சி முடித்த 300 மாணவிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கினார். எவர்வின் பள்ளியில் மாணவிகளுக்கு தையல் எந்திரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர், அவர் பேசியதாவது: பெண்களுடைய திட்டங்களுக்கும் சாதனைகளுக்கும் இப்போது ஆட்சிக்கு வந்தபோது மட்டுமல்ல, இதற்கு முன்பும் திமுக ஆட்சியின் சார்பில் பல திட்டங்களை எல்லாம் தேடி நிறைவேற்றியுள்ளோம். பெண்களுடைய முன்னேற்றம்தான் இந்த நாட்டினுடைய முன்னேற்றம். சொத்தில் பெண்களுக்கு சம உரிமை. வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு. உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு. கர்ப்பிணி பெண்களுக்கு உதவி தொகை. விதவைகளுக்கு மறுவாழ்வு திட்டம் இந்தத் திட்டங்களுக்கு எல்லாம் நிதி வழங்கப்பட்ட ஆட்சிதான் நம்முடைய திமுக ஆட்சி.

பெண்கள் பேருந்தில் பயணம் செய்யும்போது இலவசமாக பயணம் செய்யலாம் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளோம் இன்று சான்றிதழ் வாங்கும்போது நிறைய பெண்கள் அந்த திட்டத்தை கொண்டு வந்ததற்காக  எனக்கு நன்றியை தெரிவித்தனர். இப்படி பெண்களின் முன்னேற்றத்திற்காக நிச்சயமாக உறுதியாக இந்த ஆட்சி பணியாற்றும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>