மதுரையில் பறக்கும் பாலம் இடிந்து விழுந்தது அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு: பணிகளை நிறுத்த அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு

மதுரை: ‘‘மதுரையில் பறக்கும் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விபத்து குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது, குழுவினர் அறிக்கை தரும்வரை பணிகள் நிறுத்தி வைக்கப்படும் என்று அங்கு நேரில் ஆய்வு நடத்திய அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.மதுரையில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி வைத்த புதிய பறக்கும் பால பணி 3 ஆண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் நாராயணபுரம் - அய்யர் பங்களா இடையே தூண்கள் மீது, பாலத்தின் ஒரு பகுதியான கான்கிரீட் கர்டரை பொருத்தும் பணிகள் நடந்தது. அப்போது ஹைட்ராலிக் இயந்திரம் உடைந்ததில், பாலத்தின் கான்கிரீட் கர்டர் சரிந்து விழுந்து நொறுங்கியது. இதில் பாலத்தின் கீழ் நின்றிருந்த உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளி ஆகாஷ் சிங் (26) உயிரிழந்தார். மேலே இருந்து  விழுந்த ஒருவரும் காயமடைந்தார்.

இந்நிலையில், பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் விபத்து நடந்த பாலத்தை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் எ.வ.வேலு அளித்த பேட்டி: பாலத்தின் மொத்த தூரமான 7.3 கிலோ மீட்டர் தூரத்தில் 5.9 கிலோ மீட்டர் அளவுக்கு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. ஒப்பந்ததாரரின் அஜாக்கிரதை காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது. 120 டன் எடை கொண்ட கர்டரை 200 டன் திறன் கொண்ட ஹைட்ராலிக் இயந்திரம் மூலம் தூக்கி கட்டமைக்க வேண்டும். ஆனால் 120 டன் திறன் கொண்ட ஹைட்ராலிக் இயந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒப்பந்த நிறுவனம் பாதுகாப்பற்ற முறையில், பொறியாளரை நியமிக்காமல் தொழிலாளரை மட்டுமே கொண்டு பணியை மேற்கொண்டுள்ளது. பாதுகாப்பு விதிமுறை மீறப்பட்டுள்ளது.

 தேசிய நெடுஞ்சாலைத்துறை இயக்குநர் மூலம் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக விசாரணை நடத்த திருச்சி என்ஐடி பேராசிரியர் பாஸ்கரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு தரும் அறிக்கையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை பாலப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

 மேம்பால கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் திட்ட இயக்குநர் பிரதீப் ஜெயின், பொறியாளர் சத்தியேந்தர் வர்மா, ஹைட்ராலிக் இயந்திர ஒப்பந்ததாரர் பாஸ்கரன் மற்றும் பணியாளர்கள், உள்ளிட்டோர்  மீது தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இயந்திர ஒப்பந்ததாரர் கைது: ஹைட்ராலிக் இயந்திர ஒப்பந்ததாரர் பாஸ்கரனை போலீசார் நேற்று கைது செய்தனர். விபத்து வழக்கு என்பதால் உடனடியாக அவரை போலீசார் ஜாமீனில் விடுவித்தனர்.

Related Stories:

>