×

இரட்டை குண்டுவெடிப்பு நடந்த 3 நாளில் காபூலில் மீண்டும் குண்டுவெடிப்பு: விமானநிலையம் அருகே ராக்கெட் வீசி தீவிரவாதிகள் தாக்குதல்

காபூல்: காபூல் விமான நிலையத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட மூன்றே நாட்களில், நேற்று குடியிருப்பு பகுதியில் ராக்கெட் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குழந்தை உட்பட 2 பேர் பலியாகினர். இதற்கிடையே, விமான நிலையத்தை நோக்கி மனித வெடிகுண்டாக காரில் வந்த ஐஎஸ்ஐஎஸ்-கே தீவிரவாதிகளை அமெரிக்க படையினர் டிரோன் மூலம் சுட்டு வீழ்த்தி, பயங்கர தாக்குதலை தடுத்துள்ளதாக கூறி உள்ளனர். ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களால் ஆப்கான் மக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தானை 20 ஆண்டுகளாக பாதுகாத்து வந்த அமெரிக்க, நேட்டோ படைகள் முழுமையாக வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்ட சில வாரங்களில் தலிபான்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர்.
இதனால், உலக நாடுகளின் தூதர்கள் ஆப்கானை விட்டு வெளியேறிய நிலையில், தலிபான்கள் ஆட்சிக்கு பயந்து உள்நாட்டு மக்களும் ஆயிரக்கணக்கானோர் வெவ்வேறு நாடுகளுக்கு சென்று அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர்.

ஆப்கானில் இருந்து வெளிநாட்டு படைகள், மக்கள் வெளியேறுவதற்கான கெடு நாளையுடன் முடிவடைகிறது. இந்த கெடுவை எக்காரணம் கொண்டும் நீட்டிக்க முடியாது என தலிபான்கள் எச்சரித்திருந்த நிலையில், கடந்த 26ம் தேதி காபூல் விமான நிலையம் அருகே 2 இடங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் உட்பட 170 பேர் பலியாகினர். இந்த குண்டுவெடிப்பு, அமெரிக்க ராணுவத்தையும், தலிபான் தீவிரவாதிகளையும் குறிவைத்து நடத்தியதாக ஐஎஸ்ஐஎஸ்-கே என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு பழி தீர்க்கும் வகையில் அமெரிக்க ராணுவம், டிரோன் தாக்குதல் நடத்தி, குண்டுவெடிப்புக்கு திட்டம் தீட்டிய ஐஎஸ்-கே அமைப்பின் முக்கிய தீவிரவாதியை கொன்றதாக அறிவித்தது.

இதைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமெரிக்க அதிபர் பைடன், அடுத்த 24 மணி நேரத்தில் காபூலில் மீண்டும் ஒரு தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என நேற்று முன்தினம் இரவு எச்சரிக்கை விடுத்தார். வெளியேற்றத்திற்கான கெடு நாளையுடன் முடிய உள்ளதால், இறுதிகட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள அமெரிக்க படையினர் உஷார் படுத்தப்பட்டனர். காபூல் விமான நிலைய நுழைவாயில் உட்பட சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கர்களுக்கு அதிபர் பைடன் உத்தரவிட்டார். இந்நிலையில், நேற்று மாலை காபூல் விமான நிலையம் அருகே கவாஜா பகஹ்ரா பகுதியில் குடியிருப்பு ஒன்றின் மீது ராக்கெட் குண்டு வீசப்பட்டது. இதில், குழந்தை உட்பட 2 பேர் பலியானதாக கூறப்படுகிறது. குண்டு வெடித்த வீட்டிலிருந்து கரும்புகை வெளியேறும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. இந்த சம்பவம் நடத்த அடுத்த சில நிமிடங்களில், காபூல் விமான நிலையத்தை நோக்கி மனித வெடிகுண்டாக காரில் வந்தவர்களை அமெரிக்க படையினர் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தி சுட்டு வீழ்த்தியதாக அறிவிக்கப்பட்டது.

அந்த காரில் ஏராளமானோர் மனித வெடிகுண்டாக வந்ததாகவும், அவர்களை அழித்ததால் பெரும் தாக்குதல் தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலை தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாகித் உறுதி செய்துள்ளார். வெடிபொருட்களுடன் மனித வெடிகுண்டாக வந்தவர்கள் காரை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதாக அவர் கூறி உள்ளார். ஆனால், குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களால் ஆப்கான் மக்கள் பீதி அடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் வெடிகுண்டு சத்தங்கள் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால், ஆப்கான் மக்களின் அச்சம் மேலும் அதிகரித்துள்ளது.

இங்கிலாந்தின் கடைசி விமானம் புறப்பட்டது
அமெரிக்காவுடன் இணைந்து ஆப்கானில் கடந்த 20 ஆண்டுகளாக முகாமிட்டு இருந்த இங்கிலாந்து ராணுவம், நேற்றுடன் முழுமையாக வெளியேறியது. இந்த நாட்டின் கடைசி விமானம் நேற்று முன்தினம் இரவு காபூலில் இருந்து புறப்பட்டு சென்றது. ஆப்கானை பாதுகாத்த நேட்டோ படையில் இங்கிலாந்து அதிக பங்களிப்பை கொண்டிருந்தது. அந்நாடு கடந்த 2 வாரத்தில் சுமார் 15,000 பேரை வெளியேற்றி உள்ளது. இதில் 8,000 பேர் ஆப்கான் குடிமக்கள் ஆவர். ஆனாலும், விசா பெற்ற தகுதி வாய்ந்த 1,000க்கும் மேற்பட்ட ஆப்கான் மக்களை கடைசி கட்டத்தால் தங்களால் மீட்டு வர முடியவில்லை என இங்கிலாந்து கவலை தெரிவித்துள்ளது.

இசைக்கு தடை பாடகர் கொலை
தலிபான்களின் முந்தைய ஆட்சியில் இசைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பக்லான் மாகாணம் அந்தராபி பள்ளத்தாக்கு பகுதியை சேர்ந்த பிரபல நாட்டுப்புற பாடகர் பவாத் அந்தராபி நேற்று அவரது வீட்டின் அருகே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சில நாட்கள் முன்பாக தலிபான்கள் இவரது வீட்டிற்கு வந்து பேசிவிட்டு, டீ குடித்து விட்டு சென்றதாக கொல்லப்பட்ட பவாத்தின் மகன் கூறி உள்ளார். பொது இடங்களில் கச்சேரிகளை நடத்துவதால்  பவாத்தை தலிபான்கள் கொன்றார்களா என அப்பகுதி மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

பணம் எடுக்க கட்டுப்பாடு
தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கையில் எடுத்த பிறகு ஆப்கானின் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. தனியார் வங்கிகள் நேற்று முதல் செயல்படத் தொடங்கினாலும், யாரும் ரூ.15,000க்கு மேல் பணம் எடுக்கக் கூடாது என கட்டுப்பாடு விதித்துள்ளனர். அரசு ஊழியர்களுக்கு 4 மாதம் சம்பளம் தரப்படாததால் செய்தறியாமல் தவித்து வருகின்றனர்.

இறுதி கட்டத்தில் அமெரிக்க படைகள்

கடந்த 2 வாரத்தில் அமெரிக்கா 1 லட்சத்து 13,500 பேரை விமானங்கள் மூலம் வெளியேற்றி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11 சி-17 விமானம் மூலம் 2,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இன்னும் 350 அமெரிக்கர்கள் காபூலில் இருந்து வெளியேற தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதே போல், அமெரிக்க படையினர் 4,000க்கும் குறைவானோர் காபூல் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாளையுடன் அனைத்து வெளிநாட்டு படைகளும் வெளியேறிய பிறகு, அனைத்து தரப்பினரையும் உள்ளிடக்கிய புதிய அரசு அமைக்கப் போவதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.


தலிபான் கட்டுப்பாட்டில் காபூல் விமான நிலையம்
மக்களை வெளியேற்ற காபூல் விமான நிலையம் மட்டும் முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்ததது. தற்போது, இதன் 3 நுழைவாயில்கள் தலிபான்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுள்ள தலிபான்கள், கூட்டம் கூட்டமாக விமான நிலையம் நோக்கி மக்கள் வர தடை விதித்துள்ளனர். விமான நிலைய பிரதான நுழைவாயிலுக்கு சீல் வைத்துள்ளனர். தற்போது, உரிய ஆவணங்களுடன் நாட்டை விட்டு வெளியேறுபவர்கள் மட்டுமே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். விமான நிலையத்தில் உள்ள ரேடார் கண்காணிப்பு உள்ளிட்ட சில பகுதிகள் மட்டுமே அமெரிக்க படைகள் பாதுகாப்பில் உள்ளது. ஒட்டு மொத்தமாக காபூல் விமான நிலையத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தலிபான் தயாராக இருப்பதாக அதன் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.



Tags : Kabul , Double bombing, in Kabul, bombing
× RELATED பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழை...