×

குஜராத் புதிய ஆலையில் இருந்து கோவாக்சின் தடுப்பூசி சப்ளை தொடங்கியது

அங்கலேஸ்வர்: குஜராத் ஆலையிலிருந்து கோவாக்சின் தடுப்பூசி விநியோகம் தொடங்கியதாக ஒன்றிய அமைச்சர் மன்சுக் மண்டாவியா தெரிவித்துள்ளார். ஐதராபாத்தின் பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு சொந்தமான குஜராத் மாநிலம், பஹ்ருச் மாவட்டம் அங்கலேஸ்வரில் உள்ள ஆலையில், கோவாக்சின் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய ஒன்றிய அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. இந்த ஆலையில் கூடுதலாக 20 கோடி டோஸ் தடுப்பூசி உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக பயோடெக் நிறுவனம் கடந்த மே மாதம் அறிவித்தது. இந்நிலையில், அங்கலேஸ்வர் ஆலையிலிருந்து முதல் பிரிவு கோவாக்சின் தடுப்பூசி விநியோகம் தொடங்கி இருப்பதாக ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மண்டாவியா தனது டிவிட்டரில் நேற்று அறிவித்தார்.

அவர் தனது டிவிட்டரில், ‘கொரோனாவுக்கு எதிரான தேசத்தின் போரை வலுப்படுத்தும் முக்கிய ஆயுதம் தடுப்பூசி. தற்போது, அங்கலேஸ்வர் ஆலையில் இருந்து கோவாக்சின் தடுப்பூசியின் முதல் வர்த்தக விநியோகம் தொடங்கி இருக்கிறது. இது நாட்டின் தடுப்பூசி விநியோகத்தை அதிகரித்து, ஒவ்வொரு இந்தியனையும் தடுப்பூசி சென்றடைய உதவும்,’ என்று கூறியுள்ளார். சுகாதார அமைச்சக புள்ளி விவரங்களின்படி, நேற்று காலை வரை நாடு முழுவதும் 63.09 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

5வது நாளாக அதிகரிப்பு
* கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் தொடர்ந்து 5வது நாளாக நேற்றும் தினசரி பாதிப்பு குறையவில்லை.
* கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,083 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். மொத்த பாதிப்பு 3 கோடியே 26 லட்சத்து 95 ஆயிரத்து 30.
* கடந்த 24 மணி நேரத்தில் 460 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி 4 லட்சத்து 37 ஆயிரத்து 830.

Tags : Kovacs ,Gujarat , Gujarat, plant, covaxin, vaccine
× RELATED சி.எஸ்.கே – குஜராத் அணிகள் மோதும் போட்டி: டிக்கெட் விற்பனை தொடக்கம்