×

ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலைய குண்டுவெடிப்பு: பத்திரிகையாளர்கள், தடகள வீரர்கள் உயிரிழப்பு

காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுக்கு எதிரான நீண்டகால போரில் தலீபான் தீவிரவாதிகள் கையில் ஆட்சி அதிகாரம் முழுமையாக சென்றுள்ளது. இதன் காரணமாக ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு குடிமக்களை வெளியேற்றும் பணியில் அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் செயல்பட்டு வருகின்றன.

இதற்காக காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க படைகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.  வருகிற 31ந்தேதிக்கு பின் காபூலில் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டு படைகள் முழுவதும் திரும்பப்பெறப்படும் என அமெரிக்க அதிபர் பைடன் அறிவித்துள்ளார். இதனால் ஆயிரக்கணக்கானோர் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே குவிந்தனர். காபூல் விமான நிலையம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே கடந்த சில நாட்களுக்கு முன் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் 190 பேர் உயிரிழந்தனர் மற்றும் 13 பேர் அமெரிக்க பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். இந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காபூல் விமான நிலைய தாக்குதலில் ஈடுபட்டவர்களை வேட்டையாடுவோம் என கூறினார். அவர்களை பதிலுக்கு விலை கொடுக்க செய்வோம் என்றும் கூறினார். ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கவுரவம் அளிக்கும் வகையில் வருகிற 30ந்தேதி மாலை வரை அமெரிக்க கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்தது.

இந்நிலையில் காபூல் விமான நிலைய குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிக்கி 2 பத்திரிகையாளர்கள் மற்றும் 2 தடகள வீரர்கள் பலியாகி உள்ளனர். இதுபற்றி வெளியான செய்திக்குறிப்பில், காபூல் விமான நிலைய குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிக்கி ரஹா என்ற செய்தி நிறுவனத்தில் பணியாற்றிய அலி ரெஜா அகமதி என்ற நிருபரும், ஜஹான் இ சிஹாத் என்ற தொலைக்காட்சி சேனலின் முன்னாள் தொகுப்பாளர் நஜ்மா சாதிக் என்பவரும் உயிரிழந்துனர். இதேபோன்று தேசிய அளவிலான தடகள வீரர்கள் 2 பேர் உயிரிழந்துனர். அவர்கள் தேக்வாண்டோ விளையாட்டு வீரர் முகமது ஜான் சுல்தானி மற்றும் வுசூ விளையாட்டு வீரர் இத்ரீஸ் என அடையாளம் கண்டறியப்பட்டு உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் அந்நாட்டில் 100க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Kabul airport ,Afghanistan , Afghanistan Kabul airport bombing: Journalists, athletes killed
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி