×

எருக்கூரில் 50 ஆண்டு பழமை வாய்ந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்றம்

கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே எருக்கூரில் 50 ஆண்டுகாலம் பழமைவாய்ந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஊராட்சி சார்பில் இடித்து அகற்றப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் எருக்கூரில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டிடம் இருந்து வந்தது. இந்நீர்த்தேக்க தொட்டி மூலம் அப்பகுதியில் உள்ள சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிலத்தடி நீரை பயன்படுத்தி மின்மோட்டார் மூலம் தண்ணீரை மேலே உள்ள தேக்க தொட்டியில் ஏற்றி பின்னர் கிராமங்களில் உள்ள தெருக்களுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் அளிக்கப்பட்டு வந்தது.

 இந்த மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி கிராமத்தில் உள்ள தெருவில் மக்கள் அதிகம் வந்து செல்லும் இடத்திலும், அங்குள்ள மாரியம்மன் கோயிலுக்கு அருகாமையிலும் இருந்து வந்தது. எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் இருந்து வந்ததால், பொதுமக்கள் நீர்த்தேக்கத் தொட்டி கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

கிராம மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா உத்தரவின்பரில் ஒன்றியக் குழுத்தலைவர் ஜெயப்பிரகாஷ், ஆணையர் மீனா, பிடிஓ அன்பரசு ஆகியோர் பரிந்துரையின் பேரில் எருக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ்ச்செல்வி சுப்பையா நேற்று சம்பவ இடத்திற்கு பொக்லைன் இயந்திரத்துடன் ஊராட்சி ஊழியர்களுடன் நேரில் சென்று 50 ஆண்டு காலம் பழமையான,இடிந்து விழுந்துவிழும் நிலையில் இருந்த கட்டிடத்தை இடித்து அகற்றினார். மேலும் அந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்தார்.

Tags : Erukur , Demolition of a 50-year-old overhead reservoir at Erukkur
× RELATED சீர்காழி அருகே எருக்கூர் அரசு பள்ளியில் முப்பெரும் விழா