×

குப்பம் அருகே காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு 564 கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

க.பரமத்தி: குப்பம் அருகே வெவ்வேறு இடங்களில் காவிரி குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்காததால் 564 கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கரூர் மாவட்டம் க.பரமத்தி, அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு கடந்த 2003ம் ஆண்டு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக ரூ.5 கோடியில் பணிகள் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தில் நொய்யல் அடுத்த மறவாப்பாளையம் காவிரி ஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு அதிலிருந்து குழாய் மூலம் க.பரமத்தி, அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி உள்ளிட்ட 564 கிராமங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் செல்லும் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள வழித்தடங்களான நொய்யலில் இருந்து க.பரமத்தி செல்லும் வழியில் குப்பம் அடுத்த தனியார் கிரஷர் நிறுவனம் அருகே காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு மாதமாகியும் இந்த உடைப்பை சீரமைக்காததால் தினமும் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி தனியாருக்கு சொந்தமான நிலத்தில் ஓடுகிறது. இதனால் க.பரமத்தி ஒன்றிய சுற்று வட்டார பகுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளுக்கு முறையான குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளனர். குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகிகளிடம் பொதுமக்கள் தெரிவித்தும் பலனில்லை. இதனால் தினமும் பல லட்சம் லிட்டர் காவிரி குடிநீர் வீணாகி வருகிறது. மேலும் க.பரமத்தி, அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி உள்ளிட்ட ஊர்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைந்த குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kaviri , Breakage of Cauvery drinking water pipe near Kuppam puts 564 villages at risk of drinking water shortage
× RELATED காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஏப்ரல் 4ல்...