சமூக ஆர்வலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நெல்லையில் அரசு சித்த மருத்துவ பல்கலை. அமையுமா?

நெல்லை: அரசு சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க ரூ.2 கோடி அடிப்படை நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தை நெல்லையில் அமைக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தை பாளையில் அமைக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் பாளை அரசு சித்த மருத்துவகல்லூரி முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொதுநல சங்க தலைவர் பால் அண்ணாத்துரை தலைமை வகித்தார்.

சமூக ஆர்வலர் பாரதிமுருகன், எஸ்.ஆர். சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரம்பரை சித்த வைத்தியர் சங்கரன் ஆசான், அசோக், சேதுசுந்தரம், பார்வதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து நிர்வாகிகள் கூறுகையில் ‘‘நெல்லை மாவட்ட பொதுநல அமைப்பு அகில பாரதிய க்ரஹ பஞ்சாயத்து மற்றும் பாரதி மன்றம் அமைப்புகள் சார்பில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக சித்த மருத்துவ சேவை புரியும் நெல்லை சித்த மருத்துவக் கல்லூரியை தரம் உயர்த்தி பல்கலைக்கழகமாக உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறோம். திமுக, தேர்தல் அறிக்கையில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமையும் என உறுதிபட அறிவித்துள்ளது.

பொதிகை மலைச்சாரலில் நூற்றுக்கணக்கான மூலிகைகள்  இயற்கையாகவே கிடைக்கின்றன. நோய் தடுப்பு மருந்தான கபசுரக் குடிநீர், நிலவேம்பு குடிநீர் உள்ளிட்ட மருந்துகளை வழங்கி அனைவரின் உயிரையும் பாதுகாக்கிறது. அரசு சித்த மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு ரூ.2 கோடி அடிப்படை நிதி ஒதுக்குவதாக இடம் குறிப்பிடாமல்  அறிவிக்கப்பட்டுள்ளது. பாளை எம்எல்ஏ அப்துல்வஹாப் இதுகுறித்து கடந்த 23ம் தேதி சட்டமன்றத்தில் வலியுறுத்தி பேசியுள்ளார். எனவே அரசு சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தை நெல்லையில் அமைப்பது குறித்து பொது சுகாதார மருத்துவதுறை மானியக் கோரிக்கையின்போது அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும்’’ என்றனர்.

* மெகா பேனராக ‘தினகரன்’ செய்தி

ஆர்ப்பாட்டத்தின்போது பாளையில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்பது தொடர்பாக தினகரன் நாளிதழில்  வெளியான சிறப்பு செய்தியை `மெகா சைஸ் பிளக்ஸ்’ போர்டாக கல்லூரி முன் பொதுமக்கள் பார்வைக்காக வைத்திருந்தனர். தொடர்ந்து அப்பகுதியில்  வைக்கப்பட்டுள்ள இந்த செய்தி பேனரை பொதுமக்கள் பார்த்து படித்துச் செல்கின்றனர்.

Related Stories:

>