×

புதுச்சேரியில் வலை பிரச்சனையால் இரு தரப்பினரிடையே மோதல்: 3 மீனவ கிராமங்களில் 144 தடை உத்தரவு அமல்..!

புதுச்சேரி: புதுச்சேரியில் சுருக்குமடி வலையை பயன்படுத்தியதால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதையடுத்து மூன்று கிராமங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி நல்லவாடு கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் சுருக்கு மடி வலையை பயன்படுத்தி நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கேயே மீன்பிடித்துக் கொண்டிருந்த வீராம்பட்டினம் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.

இந்த விவகாரம் ஊரில் இருப்பவர்களுக்கும் தெரியவரவே, இரு தரப்பும் ஆயுதங்களை வைத்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது சம்பவ இடத்தில் இருந்த போலீசார் இரு தரப்பையும் சமாதானப்படுத்தும் நோக்கில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் 2 முறை சுட்டனர். அதன்பின்னரே அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் மீனவ கிராமங்களுக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நல்லவாடு, வம்பாகீரப்பாளையம், வீராம்பட்டினம் கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

3 மீனவ கிராமங்களில் 144 தடை உத்தரவு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. வரும் 04.09.2021 வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் அந்த தடை உத்தரவின்படி 3 கிராமங்களிலும் 5 பேருக்கு மேல் நடமாடக்கூடாது. தேவையின்றி எங்கும் கூட்டம், போராட்டம் ஆகியவை நடத்தக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதே போல் 600 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என போலிசார் தெரிவித்துள்ளனர்.

Tags : Clash between two parties over web issue in Pondicherry: 144 ban orders enforced in 3 fishing villages ..!
× RELATED பிரபல எலக்ட்ரிக் கார் நிறுவனமான...