×

முதல்வர் கட்டாரை எதிர்த்து போராட்டம் அரியானாவில் போலீஸ் தடியடி விவசாயிகள் 10 பேர் படுகாயம்: ராகுல் கடும் கண்டனம்

புதுடெல்லி: அரியானாவில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போலீசார் நடத்திய தடியடியில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதற்கு ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒன்றிய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியின் சிங்கு, திக்ரி, காஜியாபூர் எல்லைகளில் விவசாயிகள் கடந்த 9 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அரியானாவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக கர்னால் மாவட்டத்துக்கு இம்மாநிலத்தை ஆட்சி செய்யும் பாஜ.வின் முதல்வர் மனோகர் லால் கட்டார் நேற்று சென்றார். அப்போது, பஸ்தாரா சுங்க சாவடி அருகே சென்ற போது முதல்வர், மாநில பாஜ தலைவர் ஓபி. தங்காரின் காரை விவசாயிகள் வழி மறித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில், 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் காயமடைந்தனர்.

இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதிகளில் போக்குவரத்து தடைபட்டது. போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், `மீண்டும் விவசாயிகளின் ரத்தம் சிந்தப்படுகிறது… நாடு வெட்கி தலை குனிகிறது...,’ என்று கூறியுள்ளார். மேலும், ரத்தக்கறை படிந்த துணியுடன், தலையில் அடிபட்டு ரத்தம் சிந்தும் விவசாயிகளின் படங்களை இத்துடன் அவர் இணைத்து பதிவிட்டுள்ளார்.


மண்டையை உடையுங்கள்
அரியானா மாநில காங்கிரஸ் தலைவர் குமாரி செல்ஜா கூறுகையில், ``கர்னாலில் விவசாயிகள் தாக்கப்பட்டது, அவர்களை பாஜ எப்படி புறக்கணிக்கிறது என்பதற்கு எடுத்து காட்டு,’’ என்று தெரிவித்தார். மேலும், அவர் வெளியிட்ட வீடியோவில், கர்னால் மாவட்ட ஆட்சியர் ஆயுஷ் சின்கா, `விவசாயிகளின் மண்டையை உடையுங்கள்,’ என்று கூறும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.




Tags : Haryana ,Rahul , Chief, Haryana, Police, baton
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...