×

ஒரே நாடு, ஒரே நம்பர் பிளேட் புதிய பாரத் சீரிஸ் வாகன பதிவு முறை அறிமுகம்: மாநிலம் விட்டு மாநிலம் மாறினாலும் மறுபதிவுக்கு அவசியமில்லை

புதுடெல்லி: அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் இனிமேல் புதிதாக வாங்கும் வாகனங்களுடன் மாநிலம் விட்டு மாநிலம் இடம் மாறினாலும், வாகனத்தை மறுபதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக, ‘பாரத் சீரிஸ்’ எனும் புதிய பதிவு நடைமுறையை ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிமுகப்படுத்தி உள்ளது. பணியிட மாறுதல் உள்ளிட்ட காரணங்களால் தனி நபர்கள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு குடிபெயரும் போது, அவர்களின் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை குடிபெயரும் மாநிலத்தில் 12 மாதத்திற்குள் மறுபதிவு செய்ய வேண்டும்.  இதற்காக ஏற்கனவே வாகனத்தை பதிவு செய்த மாநிலத்தின் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் இருந்து என்ஓசி சான்றிதழ் பெற்று, குடிபெயரும் மாநில மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் மறுபதிவு செய்ய வேண்டும். இதனால், இவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

இனிமேல், இப்படிப்பட்ட அலைச்சலோ, அவஸ்தையோ இவர்களுக்கு ஏற்பட வாய்ப்பில்லை. காரணம், இதுபோன்ற சிக்கல்களை தடுப்பதற்காக,  ‘பாரத் சீரிஸ்’ (BH) எனும் புதிய பதிவு நடைமுறையை ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இனிமேல், புதிதாக வாங்கப்படும் வாகனங்களுக்கு மட்டுமே இந்த புதிய பதிவு நடைமுறை பொருந்தும். அதுவும், ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட 4 பிரிவு சேர்ந்த ஊழியர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். சாதாரண மக்களுக்கு பொருந்தாது. இந்த புதிவு நடைமுறையை பயன்படுத்தும் தகுதி பெற்றவர்கள் வருமாறு:
* ராணுவ வீரர்கள்
* ஒன்றிய அரசு ஊழியர்கள்,
* மாநில அரசு ஊழியர்கள்
* 4-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களில் கிளைகள் கொண்ட தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள்.
இந்த பதிவு வசதியை, இவர்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பதிவு முறையை பெறுபவர்கள், எந்த மாநிலத்திற்கு வாகனத்தை கொண்டு சென்றாலும், மறுபதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.

வாகனங்களை ‘பிஎச் சீரிசில் பதிவு செய்ய 2 ஆண்டுகளுக்கு சேர்த்து சாலை வரி செலுத்த வேண்டும். இது முழுக்க முழுக்க ஆன்லைனில் பதிவு செய்யப்படும். ஆர்டிஓ அலுவலகத்திற்கு செல்ல இந்த புதிய பதிவு நடைமுறை செப்டம்பர் 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.  ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு என்பது உட்பட பல்வேறு திட்டங்களை ஒன்றிய அரசு அமல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், தற்போது ‘ஒரே நாடு; ஒரே நம்பர் பிளேட்’ என்ற திட்டத்தையும், இந்த பாரத் சீரிஸ் பதிவின் மூலம் அது புகுத்துகிறது.

நம்பர் வழங்குவதில் புதுமை
‘பாரத் சீரிஸ்’ பதிவு முறையில் YY BH 1234 XX என்ற முறையில் நம்பர் பிளேட் வழங்கப்படும். இதில், YY என்பது பதிவு செய்யப்படும் ஆண்டு. BH என்பது பாரத் சீரிசை குறிக்கிறது. வழக்கமான 4 இலக்க (1234) நம்பர் வழங்கப்படும். XX என்பது இரு ஆங்கில எழுத்துக்களாகும்.
* ‘பாரத் சீரிஸ்’ பதிவு முறையில், வாகன விலை ரூ.10 லட்சமாக இருந்தால் 8 சதவீத சாலை வரி செலுத்த வேண்டும்.
*  ரூ.10 முதல் ரூ.20 லட்சம் வரையிலான விலை உள்ள வாகனங்களுக்கு 10 சதவீத சாலை வரியும், ரூ.20 லட்சத்திற்கு மேல் இருந்தால் 12 சதவீத சாலை வரியும் செலுத்த வேண்டும்.
* டீசல் வாகனங்களுக்கு பெட்ரோல் வாகனங்களை விட கூடுதலாக 2 சதவீத வரி செலுத்த வேண்டும்.
* எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு, மேற்கூறிய வரியில் இருந்து 2 சதவீதம் வரி குறைவாக செலுத்த வேண்டும்.

Tags : One country, one number, plate new, Bharat series
× RELATED சின்னங்கள் பொருத்தும் எந்திரங்களை மே...