நிலக்கரி ஊழல் நிதி மோசடி வழக்கு மம்தா மருமகன், மனைவி, அதிகாரிகளுக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் நிலக்கரி ஊழல், நிதி மோசடி நடந்துள்ளதாக கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில், மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தாவின் மருமகனும், எம்பி.யுமான அபிஷேக் பானர்ஜி ₹730 கோடியை சட்ட விரோதமாக பெற்று உள்ளதாகவும், இந்த பணத்தை லண்டன், தாய்லாந்தில் உள்ள நெருங்கிய உறவினர்களின் பெயர்களுக்கு  அபிஷேக் பானர்ஜி மாற்றியதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, அபிஷேக் மனைவி ருஜிராவிடமும் சிபிஐ ஏற்கனவே விசாரணை நடத்தி உள்ளது.

இந்நிலையில், அடுத்த மாதம் 6ம் தேதி அபிஷேக் பானர்ஜியும், செப்.1ம் தேதி ருஜிராவும் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது. மேலும், அபிஷேக்குடன் தொடர்பில் இருந்த ஐபிஎஸ் அதிகாரிகள், வழக்கறிஞருக்கும் அடுத்த மாதம் வெவ்வேறு தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பி உள்ளது.

தேர்தல் வன்முறை: 2 பேர் கைது

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு ஆளும் திரிணாமுல் காங்கிரசார் நடத்திய தாக்குதல்களில் எதிர்க்கட்சியினர் கொல்லப்பட்டது, பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், நாடியா மாவட்டத்தில் தர்மா கோஷ் என்பவரை கொல்ல முயன்ற வழக்கில் பிஜாய் கோஷ், அசிமா கோஷ் என்ற 2 பேரை சிபிஐ நேற்று கைது செய்தது. இது, இந்த வழக்கில் செய்யப்பட்டுள்ள முதல் கைது நடவடிக்கையாகும். இது, முதல்வர் மம்தாவுக்கு நேற்று விழுந்த 2வது அடியாக கருதப்படுகிறது.

அரசியல் ரீதியா சண்டை போடுங்க..

முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், ‘‘அரசியல் ரீதியாக பாஜ எங்களுடன் சண்டை போடாமல் சிபிஐ, அமலாக்கத் துறையை பயன்படுத்துகிறது. எங்கள் கட்சியில் இருந்து சிலர் வெளியேறினார்கள். அவர்களுக்கு தங்கள் வீடு எது என்று தெரியும். அதனால், அவர்கள் தற்போது திரும்பி வருகிறார்கள். பாஜ தலைவர்களை பற்றி என்னிடம் ஆதாரம் உள்ளது. அதையும் ஒன்றிய அமைப்புகளுக்கு அனுப்புகிறேன்,’’ என்றார்.

Related Stories:

More
>