×

காபூல் மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு திட்டம் தீட்டிய ஐஎஸ்-கே தீவிரவாதியை கொன்றது அமெரிக்கா

* டிரோன் தாக்குதல் நடத்தி பழி தீர்த்தது
* அடுத்த 3 நாட்கள் மிகவும் ஆபத்தானது

காபூல்: காபூல் விமான நிலைய மனித வெடிகுண்டு தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஐஎஸ்-கே தீவிரவாதியை டிரோன் மூலம் தாக்குதல் நடத்தி கொன்று விட்டதாக அமெரிக்க ராணுவம் கூறி உள்ளது. காபூலில் இருந்து மக்களை மீட்டு வரும் இறுதிகட்டமான அடுத்த 3 நாட்கள் மிக அபாயகரமான காலமாக வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்த பிறகு கடந்த 2 வாரமாக அனைத்து நாடுகளும் தங்களின் தூதர்கள் மற்றும் நாட்டு மக்களை விமானம் மூலம் தாய்நாட்டிற்கு அழைத்துச் செல்கின்றன. தலிபான்கள் ஆட்சிக்கு பயந்து ஆப்கன் மக்களும் ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். வரும் 31ம் தேதியுடன் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் மக்களை அழைத்துச் செல்லும் பணியை முடித்துக் கொள்ள வேண்டுமென தலிபான்கள் கெடு விதித்துள்ளனர். இதற்கிடையே, கடந்த 26ம் தேதி காபூல் விமான நிலையத்தில் 2 மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ்-கே எனும் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியவர்களை மன்னிக்க மாட்டோம், வேட்டையாடுவோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சபதம் செய்திருந்தார். அதன்படி, அமெரிக்க ராணுவ படைகள் அதிரடி வான்வழி தாக்குதல் நடத்தியதாக நேற்று தகவல் வெளியிட்டன. ஐஎஸ்-கே தீவிரவாதிகள் ஆப்கானின் நங்கார் மாகாணத்தில் பதுங்கி உள்ளனர். அங்கு அமெரிக்க படைநடத்திய டிரோன் தாக்குதலில், காபூல் விமான நிலைய வெடிகுண்டு தாக்குதலை திட்டமிட்ட ஐஎஸ்-கே அமைப்பின்  முக்கிய புள்ளி கொல்லப்பட்டதாகவும், இதில் பொதுமக்கள் யாரும் பலியாகவில்லை என்றும் அமெரிக்க மத்திய பிரிவு செய்தி தொடர்பாளர் கேப்டன் பில் உர்பன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, வெள்ளை மாளிகையில் அதிபர் பைடனுடன்  அவரது தேசிய பாதுகாப்பு குழு அவசர கூட்டம் நடத்தியது. இதில், துணை அதிபர் கமலா ஹாரிசும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்றார். இக்கூட்டத்தில், அடுத்த 3 நாட்கள் காபூல் விமான நிலையத்தில் மிக அபாயகரமான காலம் எனவும், மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அமெரிக்க படைகள் முழு பாதுகாப்பு அமைப்புகளை ஏற்பாடு செய்துள்ளதாகவும், கடைசி நிமிடம் வரை களத்தில் இருந்து அனைத்து மக்களையும் பத்திரமாக அழைத்து வருவதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 வாரத்தில் அமெரிக்கா 1.11 லட்சம் பேரை மீட்டு வந்துள்ளது. அடுத்து உள்ள கடைசி 3 நாட்களில் அதிகளவில் மக்கள் வெளியேற்றி அழைத்து வரப்படுவார்கள் என்றும் அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.

பலி 200ஐ நெருங்கியது
காபூல் விமான நிலைய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 200ஐ நெருங்கி உள்ளது. ஆப்கன் சுகாதார அதிகாரிகள் நேற்று முன்தினம் விடுத்த அதிகாரப்பூர்வ தகவலில் 170 பேர் பலியானதாக கூறி உள்ளனர்.


Tags : United States ,Kabul , Kabul human, bomb, plot to attack, terrorist
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்