×

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் விண்கலத்தின் முதற்கட்ட சோதனை வெற்றி

பணகுடி: அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இந்த வரிசையில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் 4வது நாடாக இந்தியா விரைவில் இடம்பெற உள்ளது. இதற்காக ‘‘ககன்யான்’’ என்ற பெயரில் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் மிகப்பெரிய திட்டப் பணிகளில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன்படி, ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் செலுத்தப்படும் ‘‘ககன்யான்’’ திட்ட விண்கலத்தில் 3 வீரர்கள் விண்வெளி செல்ல உள்ளனர். இந்த ககன்யான் விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான விகாஸ் இன்ஜின் பரிசோதனை, நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ திரவ இயக்க உந்தும வளாகத்தில் கடந்த ஜூலை 13ம் தேதி நடந்தது. 240 விநாடிகள் நடைபெற்ற சோதனை வெற்றி அடைந்ததாக இஸ்ரோ தெரிவித்தது.

இந்நிலையில் நேற்று மதியம் 1.10 மணியளவில் நெல்லை மாவட்டம், மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சர்வீஸ் மாடலில் உள்ள திரவ எரிபொருள் முதற்கட்ட சோதனை நடந்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் சிவன், ககன்யான் திட்ட  இயக்குநர் ஹட்டன், இயக்குநர்கள் சோம்நாத், நாராயணன் உள்ளிட்டோர் காணொலி  காட்சி மூலம் இதனை பார்த்தனர். மகேந்திரகிரி திரவ இயக்க உந்தும  இயக்குநர் அழகுவேல் முன்னிலையில் இச்சோதனை நடந்தது. 450 விநாடிகள், அதாவது 7.5 நிமிடங்கள் நீடித்த இந்த முதற்கட்ட சோதனை முழு வெற்றி அடைந்துள்ளது.  தற்போது முதற்கட்ட சோதனை முடிந்துள்ள நிலையில், அடுத்தடுத்து பிற கட்ட சோதனைகளும் நடத்தப்பட உள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

Tags : Into space, humans, Kaganyan, experiment
× RELATED மலைப்பாதையில் ஆவேசமாக அரசு பஸ்சை...